12 நாட்களாக அல் பலாஹ் பல்கலை அருகே வெடிமருந்து பதுக்கல்; என்ஐஏ விசாரணையில் திடுக்!
12 நாட்களாக அல் பலாஹ் பல்கலை அருகே வெடிமருந்து பதுக்கல்; என்ஐஏ விசாரணையில் திடுக்!
UPDATED : நவ 28, 2025 10:57 AM
ADDED : நவ 28, 2025 10:37 AM

புதுடில்லி: டில்லி தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகளை, அல் பலாஹ் பல்கலைக்கு பின்புறம் உள்ள ஷெட்டில் 12 நாட்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்ஐஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த நவ.,10ம் தேதி டில்லியில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், நாளுக்கு நாள் திடுக்கிடும் புது தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய அல் பலாஹ் பல்கலை பேராசிரியர் முஷம்மில் அகமது கனாயிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
இது குறித்து என்ஐஏ தரப்பில் கூறியதாவது; அல் பலாஹ் பல்கலை வளாகத்தை அடுத்துள்ள மசூதிக்கு பின்புறம் உள்ள செட்டில் 2,600 கிலோ அமோனியம் நைட்ரேட்டை பதுக்கி வைத்துள்ளனர். மசூதியில் பழக்கம் ஏற்பட்ட ஒருவரிடம் சிறு பொருட்களை தங்களுக்கு சொந்தமான ஷெட்டில் வைத்துக் கொள்ள அனுமதி பெற்று, அமோனியம் நைட்ரேட்டை அங்கு வைத்துள்ளான். பிறகு, அப்பகுதியில் ஏற்பட்ட கொள்ளை சம்பவம் குறித்து அறிந்தவுடன், டில்லி தற்கொலைப் படை தாக்குதல் சம்பவத்திற்கு ஒரு நாள் முன்பு, பதேபுர் தாகாவில் உள்ள ஒரு மதகுருவின் வீட்டில் இந்த அமோனியம் நைட்ரேட்டை இடமாற்றம் செய்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் அல் பலாஹ் பல்கலையில் இருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ள ஹோரி ஜமால்பூரில் 3 அறைகள் கொண்ட வீட்டை மாதம் ரூ.8,000 வாடகைக்கு அகமது கனாய் எடுத்துள்ளான். கிராம முன்னாள் பஞ்சாயத்து தலைவருக்கு சொந்தமான இந்த வீட்டை, காஷ்மீரில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படும் பழங்களை இருப்பு வைப்பதற்காக பயன்படுத்தப் போவதாக கூறியுள்ளான்.
கனாய் இந்த வீட்டுக்கு அடிக்கடி வந்துள்ளான். அப்போது, அவருடன் என்ஐஏவால் கைது செய்யப்பட்டுள்ள அல் பலாஹ் டாக்டர் ஷஹீன் ஷஹீத்தும் உடன் வந்து சென்றுள்ளார். ஷஹீனை தனது சொந்தக்காரர் என்று கிராம முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜூம்மாவிடம் அறிமுகப்படுத்தி இருந்தாலும், என்ஐஏ அதிகாரிகளிடம், அவர் தனது மனைவி என்று ஒப்புக்கொண்டுள்ளான்.
புற்றுநோயால் பாதித்த தன்னுடைய மருமகனுக்கு அல் பலாஹ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட போது, முஷம்மிலையும், தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய உமர் நபியையும் கிராம முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜூம்மா முதல்முறையாக சந்தித்துள்ளார். ஜூம்மாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
டில்லி குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு தேவையான மருந்துகள் என்ஐடி நேரு மைதானம் அருகே அமைந்துள்ள ரசாயன கடையில் இருந்து வாங்கப்பட்டுள்ளது. லால் பாபு என்பவர் உரிய உரிமம் பெற்று, மருத்துவமனை ஆய்வகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு ரசாயனங்களை விற்பனை செய்து வந்துள்ளார். இந்தக் கடையில் இருந்து தான் ரசாயனங்களை வாங்கியதாக டாக்டர் கனாய் ஒப்புக்கொண்டுள்ளான். இது தொடர்பாக கடையின் ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

