ADDED : மே 17, 2024 05:47 AM

பெங்களூரு, : காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுவதாக, பா.ஜ., -எம்.எல்.ஏ., அஸ்வத் நாராயணா குற்றச்சாட்டு கூறினார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடகாவில் முக்கிய வழக்கு விசாரணையில், உள்துறை அமைச்சர் பரமேஸ்வரின் தலையீடு உள்ளது. இதனால் போலீஸ் அதிகாரிகளால், நேர்மையாக பணி செய்ய முடியவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வாங்கி கொடுக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர். நிலைமையை புரிந்து கொண்டு, அமைச்சர் பதவியை பரமேஸ்வர் ராஜினாமா செய்ய வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகிவிட்டது. இந்த கால கட்டத்தில் கொலை, கொள்ளை, மிரட்டி பணம் பறிப்பு, திருப்திபடுத்தும் அரசியல் தான் நடந்து உள்ளது. மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது. இந்த அரசில் வளர்ச்சி பணிகள் பூஜ்யம். ஊழல் தலைவிரித்தாடுகிறது. அதிகாரிகள் இடமாற்றத்தில் பண பரிமாற்றம் நடக்கிறது. இடமாற்றத்திற்கு எவ்வளவு பணம் என, கட்டணம் நிர்ணயித்து உள்ளனர்.
முதல்வர், அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அலுவலகத்தில் வேலை செய்வோர், இடைத்தரகர்களுடன் கூட்டணி வைத்து உள்ளனர். இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நேஹா கொலைக்கு பிறகாவது, அரசு விழித்திருக்க வேண்டும். அலட்சியமாக இருந்ததால் அஞ்சலி என்ற பெண், கொலை செய்யப்பட்டு உள்ளார். அரசியலில் அனுபவம் வாய்ந்த சித்தராமையா, முதல்வராக உள்ளார். ஆனால், அவரால் நல்லாட்சி தர முடியவில்லை. மக்களுக்கு ஆதரவாக பா.ஜ., போராட்டங்களை நடத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
***

