பிரஜ்வல், ரேவண்ணா மீது பலாத்காரம், கடத்தல் வழக்கு பதிவு
பிரஜ்வல், ரேவண்ணா மீது பலாத்காரம், கடத்தல் வழக்கு பதிவு
ADDED : மே 04, 2024 07:02 AM

பெங்களூரு : ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய, எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா மீது, ஜாமினில் வெளிவர முடியாத பிரிவின் கீழ், பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹாசன் லோக்சபா தொகுதி ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. இவரது தந்தை ரேவண்ணா, 66, ஹொளேநரசிபுரா தொகுதியின் ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.
சில பெண்களுடன் பிரஜ்வல் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில், பிரஜ்வலும், அவரது தந்தை ரேவண்ணாவும், தன்னை பலாத்காரம் செய்ததாக, அவர்களது வீட்டு வேலைகார பெண் புகார் அளித்தார்.
அதனடிப்படையில், தந்தை - மகன் மீது ஹொளேநரசிபுரா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். உடன், வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவான, எஸ்.ஐ.டி.,யின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் மேலும் இரு பெண்கள் அளித்த புகாரின் பேரில், பிரஜ்வல் மீது பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடத்தல் வழக்கு
மைசூரு கே.ஆர்., நகர் போலீசில், நேற்று முன்தினம் இரவு, 20 வயது வாலிபர் அளித்த புகார்: அதில், கடந்த 29ம் தேதி இரவு, எங்கள் வீட்டிற்கு வந்த ரேவண்ணாவின் உறவினர் சதீஷ் பாபு, ரேவண்ணா அழைப்பதாக கூறி, எனது தாயாரை பைக்கில் ஏற்றிச் சென்றார். அதன்பின் எனது தாய் வீடு திரும்பவில்லை. அவரை கடத்திச் சென்று, சிறை வைத்துள்ளனர். அவரை மீட்டுத் தர கோரியிருந்தார்.
அதன்பேரில் ரேவண்ணா, சதீஷ் பாபு மீது கடத்தல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து சதீஷ்பாபுவை கைது செய்தனர்.