கீழ்நிலை நீதிமன்ற தீர்ப்பில் தலையிட ஐகோர்ட் மறுப்பு
கீழ்நிலை நீதிமன்ற தீர்ப்பில் தலையிட ஐகோர்ட் மறுப்பு
ADDED : மே 11, 2024 06:48 AM
பெங்களூரு: கீழ்நிலை நீதிமன்றம் விதித்த தீர்ப்பில் தலையிட்டால், அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை ஊக்கப்படுத்துவதாக இருக்கும்' என, மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
சிக்கமகளூரு மூடிகெரேவின் நிடிவாலே கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் ஆம்புலன்ஸ் ஓட்டுனர். இவர், 2011 ஏப்ரல் 19ல், பிதரஹள்ளி கிராமத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தை, அதிவேகமாக ஓட்டிச் சென்று கார் மீது மோதினார். இதில் கார் ஓட்டுனர் பிரகாஷ், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். காரில் இருந்த மூவர் பலத்த காயமடைந்தனர்.
விபத்துக்கு காரணமான சந்தோஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். விசாரணை நடத்திய நீதிமன்றம் சந்தோஷுக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனையும், 4,000 ரூபாய் அபராதமும் விதித்து, 2014ல் தீர்ப்பளித்தது.
தண்டனையை ரத்து செய்யக்கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சந்தோஷ் மனுத் தாக்கல் செய்திருந்தார். விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம், 'கீழ்நிலை நீதிமன்றம் சரியான தண்டனையை விதித்துள்ளது.
இது கடுமையான தண்டனை அல்ல. இதை ரத்து செய்தால், அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை ஊக்கப்படுத்தியதாக இருக்கும். இந்த வழக்கில் தலையிட முடியாது' என, நேற்று முன் தினம் தீர்ப்பளித்தது.