உதயநிதியின் சனாதன எதிர்ப்பு பேச்சு வழக்குகளை சென்னைக்கு மாற்ற மறுப்பு
உதயநிதியின் சனாதன எதிர்ப்பு பேச்சு வழக்குகளை சென்னைக்கு மாற்ற மறுப்பு
ADDED : ஆக 15, 2024 01:18 AM
புதுடில்லி, தமிழக அமைச்சர் உதயநிதியின் சனாதன எதிர்ப்பு பேச்சு தொடர்பாக மற்ற மாநிலங்களில் உள்ள வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கு, உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது; இந்த வழக்குகளில் நேரில் ஆஜராவதில் இருந்து அவருக்கு விலக்கு அளித்துள்ளது.
தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினின் மகன் உதயநிதி, மாநில அமைச்சராக உள்ளார். கடந்தாண்டு செப்டம்பரில் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், சனாதன தர்மத்துக்கு எதிராக இவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
'கொசு, டெங்கு, மலேரியா போன்றவற்றை ஒடுக்கக் கூடாது; ஒழிக்க வேண்டும். அதுபோலவே, சனாதன தர்மத்தை எதிர்க்கக் கூடாது; அதை ஒழிக்க வேண்டும்' என, அவர் பேசினார்.
அவருடைய இந்த பேச்சுக்கு, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அவருக்கு எதிராக, உத்தர பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், கர்நாடகா என, பல மாநிலங்களில் போலீசில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி, உதயநிதி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மனுவில் திருத்தம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி திருத்திய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, நீதிபதிகள் சஞ்சிவ் கன்னா, சஞ்சய் குமார் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்குகளில் நேரில் ஆஜராவதற்கு, உதயநிதிக்கு விலக்கு அளித்து அமர்வு உத்தரவிட்டது.
அதே நேரத்தில், வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுவது தொடர்பாக, வழக்கு தொடர்ந்தோர் உள்ளிட்டோர் பதிலளிக்க அமர்வு உத்தரவிட்டது.
விசாரணையின்போது, அமர்வு வாய்மொழியாக கூறியதாவது:
குற்றவியல் நடைமுறை சட்டம், 406வது பிரிவின்படி, வழக்குகளை ஒரே நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கு உத்தரவிட உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. அதே நேரத்தில், இதில் சில கட்டுப்பாடுகளும் உள்ளன. எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கையை மட்டுமே மாற்ற முடியும்; புகார்களை மாற்ற முடியாது. இந்த விவகாரத்தில் மூன்று வழக்குகளும், ஐந்து புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதனால், இவற்றை மாற்றுவது தொடர்பாக விசாரிக்கப்படும். அதே நேரத்தில், இந்த வழக்குகளை தமிழகத்துக்கு மாற்ற முடியாது. எந்த மாநிலத்துக்கு மாற்றினால் வசதியாக இருக்கும் என்பதை தெரிவிக்கவும்.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.