ADDED : ஏப் 12, 2024 02:01 AM
மும்பை,இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ஹர்திக் பாண்ட்யா மற்றும் குருணால் பாண்ட்யாவின் நிறுவனத்தின் பங்குதாரராக இருந்த உறவினர், அவர்களுக்கு 4 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்திய வழக்கில் மும்பை போலீசால் நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஹர்திக் பாண்ட்யா, இவரது சகோதரர் குருணால் பாண்ட்யா. இவரும் பிரபல கிரிக்கெட் வீரர்.
இருவரும் இணைந்து தலா 40 சதவீதம் பணத்தை முதலீடு செய்து, கடந்த 2021ல் பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலை துவங்கினர்.
இதில் அவர்களது உறவினர் வைபவ் பாண்ட்யா, 20 சதவீதம் முதலீடு செய்து பங்குதாரர் ஆனார்.
பின் தனியாக ஒரு நிறுவனம் துவங்கி, இதே தொழிலில் ஈடுபட்டுள்ளார். பங்குதாரராக உள்ள நிறுவனத்துக்கு செல்ல வேண்டிய ஆர்டர்களை தன் நிறுவனத்துக்கு மாற்றியுள்ளார்.
இதனால் பாண்ட்யா சகோதரர்களுக்கு 4.30 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த அவர்கள், மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
விசாரணை நடத்திய போலீசார், மோசடி வழக்கு பதிவு செய்து வைபவ் பாண்ட்யாவை கைது செய்தனர்.

