ADDED : ஜூலை 29, 2024 06:39 AM

கதக், : கொடுத்த நகையை திரும்ப கேட்டதால், மூதாட்டியை கொன்று உடலை எரித்த உறவினர் கைது செய்யப்பட்டார்.
கலபுரகி கமலாபூர் நாகுரா கிராமத்தில், கடந்த 14 ம் தேதி பாதி உடல் எரிந்த நிலையில், மூதாட்டியின் உடல் மீட்கப்பட்டது. அவர் கலபுரகி டவுனை சேர்ந்த பசவம்மா, 65 என்பதும், அவரை, யாரோ கழுத்தை நெரித்து கொன்று, உடலை எரித்தது தெரிந்தது.
கமலாபூர் போலீசார் நடத்திய விசாரணையில், பசவம்மாவுக்கும், அவரது உறவினரான ராஜ்குமார், 37 என்பவருக்கும் பிரச்னை இருந்தது தெரியவந்தது. அவரிடம் விசாரிக்க போலீசார் முயன்றனர். ஆனால் அவர் திடீரென தலைமறைவாகி விட்டார்.
நேற்று முன்தினம் சிஞ்சோலியில் உள்ள உறவினர் வீட்டில், ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். பசவம்மா தனது நகைகளை, ராஜ்குமாரிடம் கொடுத்து இருந்தார். அந்த நகைகளை இன்னொருவரிடம் அடகு வைத்து, ராஜ்குமார் பணம் வாங்கி உள்ளார்.
இதுபற்றி அறிந்த பசவம்மா நகைகளை தரும்படி கேட்டு உள்ளார். இதனால் நகைகளை வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று, பசவம்மாவை கொன்று உடல் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரிந்தது.