செய்தி இணையதளங்களின் சந்தாவுக்கு ஜி.எஸ்.டி., விலக்கு அளிக்க கோரிக்கை
செய்தி இணையதளங்களின் சந்தாவுக்கு ஜி.எஸ்.டி., விலக்கு அளிக்க கோரிக்கை
ADDED : ஆக 20, 2024 02:13 AM

புதுடில்லி, 'செய்தி இணையதளங்களுக்கான சந்தாவுக்கு ஜி.எஸ்.டி., வரிவிலக்கு அளிக்கவோ அல்லது வரியை 5 சதவீதமாக குறைக்கவோ மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தகவல் ஒலிபரப்புத்துறை செயலர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மத்திய நிதித்துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ராவுக்கு, மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை செயலர் சஞ்சய் ஜாஜு எழுதியுள்ள கடிதம்:
இணையத்தில் செய்திகளை வாசிக்கும் பயனர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, நம் நாட்டில், 'ஆன்லைன்' செய்தி தளங்களுக்கான கட்டண சந்தாதாரர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.
இந்நிலையில், செய்தி இணையதள சந்தாக்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி., விதிப்பதால், அதன் எதிர்கால வளர்ச்சி பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
மேலும், இணையதள நிறுவனங்கள் வாசகர்களை கவர்வதற்காகவும், பரபரப்புக்காகவும் திசை திருப்பக் கூடிய வகையில் தலைப்புகள் வைப்பது, தவறான தகவல்களை வெளியிடுவது, விளம்பரத்துக்காக சமரசம் செய்து கொள்வது அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சரியான, உண்மையான செய்திகளை அளிக்கும் நாளிதழ்களின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக, அத்துறைக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
இதே போல, டிஜிட்டல் செய்தி ஊடகத்துறையின் சந்தாக்களுக்கும் ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் அல்லது, 18 சதவீதமாக உள்ள வரியை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.
மொத்தம் 120 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் டிஜிட்டல் சந்தாவுக்கான வரி வாயிலாக, அரசுக்கு 21.6 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. அதை, 5 சதவீதமாக குறைப்பதால் அரசுக்கு பெரிய இழப்பு ஏற்படாது.
இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.