ADDED : மே 20, 2024 05:28 AM

உடுப்பி : உடுப்பியில் இரு விசைப்படகுகள் மோதியதில் ஒரு படகு கடலில் மூழ்கியது. அதில் இருந்த ஐந்து மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
உடுப்பி மாவட்டம், வடமண்டேஸ்வராவை சேர்ந்தவர் கோபால சுவர்ணா. இவருக்கு சொந்தமாக 'மல்டிதேவி 11' என்ற விசைப்படகு உள்ளது. கடந்த 16ம் தேதி ஐந்து மீனவர்களுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
மறுநாள் 17ம் தேதி, மோசமான வானிலை நிலவியது. முன்னால் இருக்கும் பொருட்கள் தெரியாத அளவில் அடர்ந்த பனிமூட்டம் காணப்பட்டது. இதனால், கடலில் 'துர்கா' என்ற மற்றொரு விசைப்படகுடன் மோதியது.
இதில், 'மல்டிதேவி 11' விசைப்படகில் ஓட்டை ஏற்பட்டது. கடல் நீர் உள்ளே புகுந்தது.
இதில் இருந்த மீனவர்கள் தண்டேலா சுரேஷ் குந்தர், கலசிஸ் சங்கர் குந்தர், சங்கரா பூஜாரி, யோகேந்திரா, அப்துல் கானில ஷேக் ஆகியோரை, 'துர்கா' படகில் இருந்த மீனவர்கள் மீட்டனர்.
'மல்டிதேவி 11' படகை கயிறு கட்டி, இழுத்து வந்தனர். ஆனால், படகு 90 சதவீதம் நீரில் மூழ்கியதால், கயிறு அறுந்தது. இதனால், 'மல்டிதேவி 11'படகு, கடலில் மூழ்கியது. 2,500 லிட்டர் டீசல் கடல் தண்ணீரில் கலந்தது. இதனால், 20 லட்சம் ரூபாய் சேதம் ஏற்பட்டது' என மீனவர்கள் கூறினர்.

