ஆர்.ஆர்.டி.எஸ்., ரயில் பாதைக்கு கீழ் மரக்கன்றுகள் நடும் பணி மும்முரம்
ஆர்.ஆர்.டி.எஸ்., ரயில் பாதைக்கு கீழ் மரக்கன்றுகள் நடும் பணி மும்முரம்
ADDED : மே 30, 2024 02:02 AM
புதுடில்லி:ஆர்.ஆர்.டி.எஸ்., அதிவேக ரயில் வழித்தடத்தின் கீழ், மீரட் சாஹிபாபாத் முதல் சதாப்தி நகர் வரை 2.5 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியில் என்.சி.ஆர்.டி.சி., எனப்படும் தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்துக் கழகம் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து, என்.சி.ஆர்.டி.சி., வெளியிட்டுள்ள அறிக்கை:
உலகளாவிய சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டு, ஆர்.ஆர்.டி.எஸ்., அதிவேக ரயில் வழித்தடத்தின் கீழ், மீரட் சாஹிபாபாத் முதல் சதாப்தி நகர் வரை 48 கி.மீ., தூரத்துக்கு 2.5 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது. இதுவரை 95 சதவீத மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மீதமுள்ள மரக்கன்றுகள் துஹாய் ஆர்.ஆர்.டி.எஸ்., டிப்போவில் நடப்பட்டுள்ளன.
துஹாய் முதல் சதாப்தி நகர் வரை ரயில் வழித்தடத்துக்கு கீழ் போகேன்வில்லா, டெகோமா, ப்ளூமேரியா ஆல்பா, அலமண்டா, மன்சோவா, ஜாஸ்மின் மற்றும் மதுமாலதி ஆகியவை நடப்பட்டுள்ளன.
இந்த பூச்செடிகள் ஆர்.ஆர்.டி.எஸ்., வழித்தடத்தின் கீழ்பகுதியை பசுமையாகவும், ரசனையாகவும் மாற்றும்.
அதேபோல், துஹாய் டிப்போவில், டிராகேனா, விக்டோரியா, ஸ்பைடர் லில்லி, லந்தானா டிப்ரெசா, வேம்பு, குல்மோஹர், அல்டமாஷ், கச்சனார், அசோகா, கடம், ஷிஷாம், சில்வர் ஓக், தேக்கு, கேனர், டெகோமா மற்றும் போகேன்வில்லா நடப்பட்டுள்ளன.
இவற்றை பராமரிக்க குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. முராத்நகர் மற்றும் வடக்கு மோடி நகர் இடையே நமோ பாரத் ரயில் சேவைகள் துவங்கப்பட்டுள்ளன. மற்ற ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது.
சதாப்தி நகர் முதல் மோடிபுரம் வரை கட்டுமானப் பணிகள் வேகமாக நடக்கிறது. அங்கு பணிகள் நிறவடைந்தவுடன் மரக்கன்றுகள் நடப்படும்.