ரூ.49,000 உதவித்தொகைக்கு சம்பள செலவு ரூ.1.42 லட்சம்
ரூ.49,000 உதவித்தொகைக்கு சம்பள செலவு ரூ.1.42 லட்சம்
UPDATED : ஆக 13, 2025 10:32 AM
ADDED : ஆக 13, 2025 03:51 AM

கோவை: வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை, 49,000 ரூபாய் பட்டுவாடா செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு மாதந்தோறும், 1.42 லட்சம் ரூபாய் ஊதியம் வழங்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, எந்த வேலையும் கிடைக்காமல், ஐந்தாண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில், 2006 முதல் தமிழக அரசால் உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உதவித்தொகை வழங்கும் பணிகளை தனியாக மேற்கொள்ளும் வகையில், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், உதவியாளர், தட்டச்சர் ஆகியோர் நியமிக்கப்பட்டுஉள்ளனர்.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, பொதுப்பிரிவில் மட்டும் 10ம் வகுப்பு முடித்தவர்கள் 17 பேர், பிளஸ் 2 முடித்தவர்கள் 30 பேர், பட்டப்படிப்பு முடித்தவர்கள் 54 பேர் என, 101 பேர் இத்திட்டத்தில் பயன்பெறுகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும், 49,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
ஆனால், இப்பணிகளை மட்டுமே கவனித்து வரும் இளநிலை வேலை வாய்ப்பு அலுவலருக்கு, 70,000, உதவியாளருக்கு, 50,000, தட்டச்சருக்கு, 22,000 ரூபாய் என, மாதந்தோறும், ஒரு லட்சத்து 42,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது.
தவிர, இதர செலவுகள் என, குறைந்தபட்சம், 20,000 ரூபாய் வரை செலவிடப்படுகிறது.
இதுபோல, 38 மாவட்டங்களில் கணக்கிட்டாலும், உதவித்தொகையை விட, ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியம் பல மடங்கு அதிகமாகிறது.
வேலை வாய்ப்பு அலுவலகங்கள் வாயிலாக, மாதந்தோறும் ஒரு வாரத்தில், தனியார் வேலை வாய்ப்பு முகாம் மற்றும் ஆண்டுதோறும் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தி, இளைஞர்கள் பலர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த உதவித் தொகைக்காக ஒதுக்கப்படும் நிதியை, மற்ற திறன் சார்ந்த பயிற்சிகளுக்கு வழங்கலாம், ஊழியர்களை மற்ற அரசு துறைகளில் காலிப்பணியிடங்களில் நிரப்பலாம் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.