எஸ்.ஐ.ஆர்., பணியை முடக்க தி.மு.க., அரசு திட்டம்: இபிஎஸ்
எஸ்.ஐ.ஆர்., பணியை முடக்க தி.மு.க., அரசு திட்டம்: இபிஎஸ்
ADDED : நவ 15, 2025 01:14 AM

ஓமலுார்: ''எஸ்.ஐ.ஆர்., பணி சுணக்கமாக இருப்பதற்கு தி.மு.க., அரசின் தலையீடே காரணம்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.
சேலம் விமான நிலையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் மற்றும் குடிபெயர்ந்த வாக்காளர் பெயர்கள் உள்ளன. கடந்த 21 ஆண்டாக, எஸ்.ஐ.ஆர்., பணி மேற்கொள்ளாததால், ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள், தவறாக இடம் பெற்றுள்ளனர்.
சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில், எஸ்.ஐ.ஆர்., பணி, சுணக்கமாக உள்ளது. இதற்கு, தி.மு.க., அரசின் தலையீடே காரணம். சென்னையில், 4ம் வகுப்பு படித்தவர்கள், பி.எல்.ஓ., பணியை மேற்கொள்கின்றனர். இது குறித்து தெரிவித்தும், அவர்கள் மாற்றப்படவில்லை.
வேண்டுமென்றே திட்டமிட்டு, எஸ்.ஐ.ஆர்., பணி நடக்கக்கூடாது என செயல்படுகின்றனர். இதற்காக, தி.மு.க., அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருப்பதாக, எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. தகுதியான, பி.எல்.ஓ., நியமிக்காததால், குழப்பம் ஏற்படுகிறது.
இடைப்பாடி தொகுதியில் மட்டும், இறந்த 5,600 பேரின் பெயர், வாக்காளர் பட்டியலில் உள்ளது. சென்னையில் பல தொகுதிகளில், பல ஆயிரம் போலி வாக்காளர்கள் இருந்ததால், நீதிமன்றம் சென்றோம். கரூரில், 10,000 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். எஸ்.ஐ.ஆர்., பணி முடிந்தால் உண்மையான வாக்காளர்கள் மட்டும் பட்டியலில் இடம் பெறுவர்.
தி.மு.க., கள்ள ஓட்டு போட முடியாது. அதனால் தான், எஸ்.ஐ.ஆர்., பணியை எப்படியாவது நிறுத்த வேண்டும் என நினைக்கின்றனர். எஸ்.ஐ.ஆர்., வாயிலாக எப்படி சதி செய்ய முடியும்? உண்மையான வாக்காளர்கள் மட்டுமே ஓட்டுப்போட முடியும்.
நானுாறு கோடி ரூபாய் மின்மாற்றி தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் உள்ளதால் அது பற்றி பேச முடியாது. மின் துறையில், 30,000 கோடி ரூபாய்க்கு ஸ்மார்ட் மீட்டர் வைப்பதில் ஊழல் நடக்க வாய்ப்புள்ளது; நீதிமன்றம் செல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடகாவில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, 'வில்லா' வீடு கட்டுவது குறித்து கேட்டபோது, 'அது குறித்த முழு விபரம் தெரியாது' என்றார்.
== புல் அவுட் == முறைகேடுகளை அ.தி.மு.க.,வினர் தடுக்க வேண்டும் போலி வாக்காளர்கள், இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், இரட்டை ஓட்டுகள் போன்றவற்றை சரி பார்த்து, உண்மையான வாக்காளர்கள் ஓட்டளிக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான், அ.தி.மு.க.,வின் கோரிக்கை. உண்மையான வாக்காளர்கள் மட்டுமே, ஓட்டளிக்க முடியும் என்ற நிலை வந்தால், தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்த, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அவதுாறு பரப்புகிறார். அ.தி.மு.க., தொண்டர்கள், நிர்வாகிகள் ஒவ்வொருவரும், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் முறையாக, எஸ்.ஐ.ஆர்., பணிகளை செய்கின்றனரா என கண்காணிக்க வேண்டும். தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்பட்டால், உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும். தி.மு.க.,வினர், தேர்தல் நேரத்தில் எப்படி உள்ளடி வேலை செய்வரோ, அதுபோல் எஸ்.ஐ.ஆர்., பணிகளிலும் ஓட்டுச் சாவடி அலுவலர்களுடன் இணைந்து, முறைகேடு செய்வதாக செய்திகள் வருகின்றன. இதை விழிப்புடன் செயல்பட்டு, முறியடிக்க வேண்டும். அ.தி.மு.க., ஓட்டுச் சாவடி முகவர்கள், இப்பணிகளை முறையாக செய்கின்றனரா என்பதை, மாவட்ட செயலர்களும், மாவட்ட பொறுப்பாளர்களும், கண்காணிக்க வேண்டும். பழனிசாமி, பொதுச்செயலர், அ.தி.மு.க.,

