ரூ.150 கோடி ஊழல் புகார்: நடிகை ரோஜாவுக்கு சிக்கல்
ரூ.150 கோடி ஊழல் புகார்: நடிகை ரோஜாவுக்கு சிக்கல்
ADDED : ஆக 16, 2024 11:38 PM

அமராவதி: ஆந்திராவில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி களுக்கு செலவிடப்பட்ட 150 கோடி ரூபாயில், நடிகையும், முன்னாள் அமைச்சருமான ரோஜா மற்றும் சிலர் ஊழல் செய்ததாக அளிக்கப்பட்ட புகாரை விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், ஜனசேனா மற்றும் பா.ஜ.,வின் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த ரோஜா, மாநிலம் முழுதும் முதல்வர் கோப்பை என்ற விளையாட்டு போட்டிகளை நடத்தினார்.
பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக, 47 நாட்கள் இந்த போட்டிகள் நடத்தப்பட்டன.
இதற்காக, 150 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஜா, வருவாய் துறை அமைச்சர் தர்மனா கிருஷ்ணதாஸ் ஆகியோர் பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக, தற்போதைய விளையாட்டுத் துறை அமைச்சர் மண்டிப்பள்ளி ராம்பிரசாத் ரெட்டி குற்றஞ்சாட்டிஇருந்தார்.
இந்நிலையில், முன்னாள் தேசிய கபடி வீரர் பிரசாத் என்பவர், ரோஜா மற்றும் தர்மனா கிருஷ்ணதாஸ் ஆகியோர் முதல்வர் கோப்பை நிதியை தவறாக பயன்படுத்தியதாக சி.ஐ.டி., போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை சி.ஐ.டி., அதிகாரிகள், விஜயவாடா கமிஷனருக்கு அனுப்பி விசாரணை நடத்தும்படி பரிந்துரைத்துள்ளனர்.
விரைவில் விசாரணைக்கு ஆஜராகும்படி, ரோஜாவை போலீசார் அழைப்பர் என கூறப்படுகிறது.

