ADDED : செப் 02, 2024 01:07 AM

ஆமதாபாத்: தீபக் குமார் தீரஜ்லால் தக்கர் என்பவர், சர்வதேச அளவில் சூதாட்டம் நடத்தியதாக, 2023 மார்ச் 25ல், குஜராத்தின் ஆமதாபாதில் உள்ள மாதவபுரம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை கையிலெடுத்த சி.பி.ஐ., அதிகாரிகள், சர்வதேச சூதாட்ட செயல்பாடுகளில், தீபக் குமார் தீரஜ்லால் தக்கர் மூளையாகச் செயல்பட்டதை கண்டறிந்தனர்.
மேலும், சிறப்பு மென்பொருள் வாயிலாக ஹவாலா சேனல்களைப் பயன்படுத்தி, 2,273 கோடி ரூபாய் அளவுக்கு, அவர் மோசடி செய்ததையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
தீபக் குமார் தீரஜ்லால் தக்கர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதை அடுத்து, குஜராத் காவல் துறை கோரிக்கையின்படி, அவருக்கு எதிராக, 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீஸ், 'ரெட் நோட்டீஸ்' பிறப்பித்தது.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில், தீபக் குமார் தீரஜ்லால் தக்கர் இருப்பது தெரிய வந்தது. அவரை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்தனர். இது குறித்த தகவல், குஜராத் போலீஸ், சி.பி.ஐ.,க்கு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்ற குஜராத் சிறப்பு போலீஸ் பிரிவினர், தீபக் குமார் தீரஜ்லால் தக்கரை கைது செய்து, குஜராத்துக்கு நேற்று அழைத்து வந்தனர்.