பெற்றோரே உஷார்...! இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்க கூடாது; மத்திய அரசு முக்கிய அறிவுரை
பெற்றோரே உஷார்...! இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்க கூடாது; மத்திய அரசு முக்கிய அறிவுரை
UPDATED : அக் 03, 2025 07:38 PM
ADDED : அக் 03, 2025 07:29 PM

புதுடில்லி: மத்தியப் பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவில், இருமல் மருந்து உட்கொண்டதால் 11 குழந்தைகள் இறந்ததாக கூறப்படும் நிலையில், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்க கூடாது என மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் சிறுநீரக செயலிழப்பு காரணமாக 15 நாட்களுக்குள் 9 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் உள்ள சுகாதார அதிகாரிகள், சில நாட்களுக்கு முன்பு சிகாரில் இதேபோன்ற மரணம் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இறந்த 9 குழந்தைகளில், குறைந்தது 5 பேர் உயிரிழப்பிற்கு, கோல்ட்ரிப் இருமல் மருந்து எடுத்துக் கொண்டது தான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து காஞ்சிபுரத்தில் உற்பத்தி செய்யப்படுவது விசாரணையில் தெரியவந்தது. பின்னர், கோல்ட்ரிப் இருமல் மருந்தை தமிழகம் முழுவதும் விற்பனை செய்ய தடை விதித்து மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவிட்டு உள்ளது.
இந்நிலையில், மத்தியப் பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவில், இருமல் மருந்து உட்கொண்டதால் 11 குழந்தைகள் இறந்ததாக கூறப்படும் நிலையில், இரண்டு வயதுக்குட்பட்ட இருமல் மருந்து கொடுக்க கூடாது என மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது. இது தொடர்பாக, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை சார்பில், அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:
* இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கக் கூடாது.
* பொதுவாக 5 வயது மற்றும் அதற்கு உட்பட்ட வயதினருக்கு, இருமல், சளி மருந்து பரிந்துரைக்கப்படுவதில்லை.
* டாக்டர்களின் பரிந்துரைகளை பின்பற்றுவது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும்.
* எந்தவொரு வைரஸ் நோயாளிக்கும் தனிப்பட்ட முறையில் சிகிச்சை அளிக்கக்கூடாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.