ADDED : ஜூலை 30, 2024 07:35 AM
ஒயிட்பீல்டு: தக்காளி வியாபாரியிடம், 32 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.
பெங்களூரின் ஒயிட்பீல்டில் வசிப்பவர் ஆதித்யா ஷா. இவர் கோலாரின் ஏ.பி.எம்.சி.,யில் தக்காளி வியாபாரம் செய்து வருகிறார். வெளி மாநிலங்களுக்கு சப்ளை செய்கிறார்.
சமீபத்தில் மேற்கு வங்கத்தின், சிலிகுரி மார்க்கெட்டின் முகேஷ் என்பவருக்கு, ஆதித்யா ஷா மூன்று லோடுகள் தக்காளி அனுப்பி வைத்தார். இதன் மதிப்பு 32 லட்சம் ரூபாய். முதற்கட்டமாக 20 லட்சம் ரூபாயை, பெங்களூரில் வசிக்கும் சஞ்சய்க்கு அனுப்பி வைப்பதாகவும், அதை பெற்றுக்கொள்ளும்படியும் முகேஷ் கூறினார்.
சஞ்சய், சில நாட்களுக்கு முன்பு, ஒயிட்பீல்டு அருகில் வியாபாரி ஆதித்யா ஷாவிடம், பணப்பையை கொடுத்தார். அதில் 20 லட்சம் ரூபாய் இருப்பதாக கூறினார். 500 ரூபாய் நோட்டுக் கட்டுகளின் மீது, ஆக்சிஸ் வங்கியின் முத்திரை இருந்ததால், பணம் இருக்கும் என நம்பிய அவர், வீட்டுக்கு கொண்டு சென்றார்.
பணத்தை எண்ணும்போது, வெள்ளை நிறத்தாள்கள் இருந்தன. ரூபாய் கட்டுகளின் மேலும், கீழும் மட்டும் 500 ரூபாய் இருந்தது. உட்புறம் வெள்ளை தாள்கள் வைத்து மோசடி செய்திருப்பது தெரிந்தது. முகேஷை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை.
எனவே முகேஷ் மற்றும் சஞ்சய் மீது, ஒயிட்பீல்டு போலீஸ் நிலையத்தில் ஆதித்யா ஷா புகார் செய்துள்ளார். போலீசாரும் விசாரிக்கின்றனர்.