மலை மஹாதேஸ்வரா கோவிலில் ரூ.3.37 கோடி காணிக்கை வசூல்
மலை மஹாதேஸ்வரா கோவிலில் ரூ.3.37 கோடி காணிக்கை வசூல்
ADDED : மார் 04, 2025 09:01 PM

பெங்களூரு : மஹா சிவராத்திரியையொட்டி மலை மஹாதேஸ்வரா மலையில் மஹோற்சவம் நடந்தது. இதனால் 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான காணிக்கை வசூலானது.
சாம்ராஜ்நகர், ஹனுாரில் மலை மஹாதேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. இது பிரசித்தி பெற்ற புண்ணிய தலமாகும்.
பெருமளவில் பக்தர்கள், சுற்றுலா பயணியர் வருகின்றனர். கர்நாடகாவின் பணக்கார கோவில்களில், இதுவும் ஒன்று. மாதந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் காணிக்கை கிடைக்கிறது.
சிவராத்திரியையொட்டி மலை மஹாதேஸ்வரா மலையில் பிப்ரவரி 25 முதல், மார்ச் 1 வரை திருவிழா மஹோற்சவம் நடந்தது.
இதில் பெங்களூரு, துமகூரு, ராம்நகர், மாண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர் உட்பட, பல்வேறு மாவட்டங்களில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இப்போதும் பக்தர்கள் எண்ணிக்கை குறையவில்லை. இதன் பயனாக கோவிலுக்கு லட்டு பிரசாதம் விற்பனை, வெவ்வேறு சேவைகள் உட்பட, மற்ற வழிகளில் 3.37 கோடி ரூபாய் காணிக்கை வசூலானது.
கடந்தாண்டு திருவிழாவில் 3.24 கோடி ரூபாய் காணிக்கை வசூலானது.மலை மஹாதேஸ்வரா மலை கோவிலில், லட்டு பிரசாதம் பக்தர்களுக்கு மிகவும் விருப்பம். அனைத்து நாட்களிலும் லட்டு விற்பனை அதிகம் இருக்கும்.
திருவிழா நடக்கும்போது, இரட்டிப்பு லட்டுகள் விற்பனையானது. லட்டு விற்பனையில் 1.44 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.