வழக்கறிஞராக பதிவு செய்ய ரூ.42,100 கட்டணமா: கோர்ட் குட்டு
வழக்கறிஞராக பதிவு செய்ய ரூ.42,100 கட்டணமா: கோர்ட் குட்டு
ADDED : ஜூலை 31, 2024 02:34 AM

புதுடில்லி 'சட்டப்படிப்பு முடித்தவர்கள் வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொள்ள, மாநில வழக்கறிஞர்கள் சங்கம் கூடுதல் கட்டணம் வசூலிக்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாநில வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தில் பதிவு செய்ய, நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக, வழக்கறிஞர்கள் சார்பில் 10 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
குஜராத்தில் எவ்வளவு?
வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவு 24ன் கீழ், வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொள்ள பொதுப் பிரிவினருக்கு 650 ரூபாயும், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு 125 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும்.
ஆனால், ஒடிசாவில் 42,100 ரூபாய்; குஜராத்தில் 25,000; உத்தரகண்ட்டில் 23,650; கேரளாவில் 20,050 ரூபாய் என, கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கில், தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பளித்தது.
அதன் விபரம்:
ஒரு தனிநபரின் கண்ணியம் என்பது அவரது திறனை முழுதுமாக வளர்த்துக்கொள்ளும் உரிமையையும், தனக்கு விருப்பமான தொழிலை மேற்கொண்டு வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்கான உரிமையையும் உள்ளடக்கியது.
வழக்கறிஞர்கள் சங்கங்களில் பதிவு செய்து கொள்ள, முன்நிபந்தனையாக அதிகப்படியான பதிவுக் கட்டணங்கள் மற்றும் இதர கட்டணங்கள் வசூலிப்பது வழக்கறிஞர் தொழிலில் நுழைவதற்குத் தடையை உருவாக்குகிறது.
இந்த அதிக கட்டண வசூல், சமூக பொருளாதார தடைகளை எதிர்கொள்பவர்களின் முன்னேற்றத்தையும், கண்ணியத்தையும் இழிவுபடுத்துகிறது. விளிம்புநிலை மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரை பாகுபாடுடன் நடத்துகிறது.
அவசியமில்லை
பார்லிமென்ட் வகுத்துள்ள நிதிக் கொள்கையை மாற்றவோ, திருத்தவோ இந்திய பார் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை. வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவு - 24 வகுத்துள்ள கட்டணத்துக்கு மேல் வசூலிக்க கூடாது.
இதுவரை வசூலித்த கட்டணத்தை மாநில வழக்கறிஞர்கள் சங்கங்கள் திருப்பித் தர வேண்டிய அவசியம் இல்லை.
சட்டம் பயின்றவர்கள் வழக்கறிஞர்களாகப் பதிவுசெய்த பின் வழங்கப்படும் பிற சேவைகளுக்கு, வழக்கறிஞர் அமைப்புகள் கட்டணம் விதிக்கலாம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.