ADDED : செப் 13, 2024 02:06 AM
பாட்னா, பீஹாரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் முன்னாள் எம்.எல்.ஏ., ஆகியோர் வீடுகளில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில், 90 லட்சம் ரூபாய் மற்றும் 13 கிலோ வெள்ளி கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பீஹார் எரிசக்தி துறையின் முதன்மைச் செயலராக இருந்தவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சஞ்சீவ் ஹன்ஸ். ராஷ்ட்ரீய ஜனதா தள முன்னாள் எம்.எல்.ஏ., குலாப் யாதவ். இவர்கள் இருவர் மீதும் சொத்து குவிப்பு வழக்கு உள்ளது.
அந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் பணமோசடி வழக்கு பதிந்து கடந்த ஜூலையில் இருவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர்.
அப்போது இருவரது இடங்களிலும் இருந்து விலையுயர்ந்த கை கடிகாரங்கள், 1 கிலோ அளவுக்கு தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறையினர் சமீபத்தில் டில்லி, கோல்கட்டா மற்றும் மும்பையில் மீண்டும் சோதனை நடத்தினர். அதில் கணக்கில் வராத, 90 லட்சம் ரூபாய் மற்றும் 13 கிலோ வெள்ளி கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.