தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ ரூ.95 லட்சம்!

ரூ.95 லட்சம்!

ரூ.95 லட்சம்!


ADDED : ஜூலை 31, 2026 10:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2026 10:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அமெரிக்காவில் பணி செய்ய விரும்பினால் செலுத்துங்கள்... வெளிநாட்டு மாணவர்களுக்கு அதிபர் டிரம்பின் அடுத்த ‘ஷாக்’

வாஷிங்டன்: அமெரிக்காவில் படித்து முடித்து அங்கேயே தங்கி வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு, 95 லட்சம் ரூபாய் கட்டணம் விதிப்பது குறித்து அதிபர் டிரம்ப் அரசு பரிசீலித்து வருகிறது. இது, பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்களின் அமெரிக்க கனவில் பேரிடியாக இறங்கி உள்ளது.

–––––––––––––

அமெரிக்காவில், ‘எப் – 1’ விசாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், கல்லுாரி படிப்பை முடித்த உடன் அங்கேயே தங்கி வேலை செய்வதற்காக ஓ.பி.டி., எனப்படும், ‘ஆப்ஷனல் பிராக்டிக்கல் டிரெய்னிங்’ என்ற நடைமுறை உள்ளது. இதன் மூலம் படிப்பை முடிக்கும் வெளிநாட்டு மாணவர், அங்கேயே தங்கி அமெரிக்க நிறுவனங்களில் வேலை பார்க்க இந்த ஓ.பி.டி., முக்கிய பாலமாக விளங்குகிறது.

இதன் அடிப்படையில், பொது படிப்பு படித்த மாணவர்கள் ஓராண்டும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித படிப்பு படித்த மாணவர்கள் மூன்றாண்டுகள் வரையும் தங்கி வேலை செய்ய அனுமதி உண்டு. ஆனால், இனி இந்த ஓ.பி.டி., சலுகையை பெறுவது வெளிநாட்டு மாணவர்களுக்கு கடினமாக மாறப் போகிறது.

அதாவது, ஓ.பி.டி., முறையில் தங்கி வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு மிகப்பெரிய அளவில் கட்டணங்களை உயர்த்த டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. அதாவது 1,00,000 அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் 95 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்க திட்டமிட்டிருப்பது தற்போது கல்வி வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இக்கட்டணத்தை மாணவர்களே செலுத்த வேண்டுமா அல்லது அவர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டுமா என்பது குறித்தும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இந்த கட்டண உயர்வு உள்நாட்டு பாதுகாப்புத்துறையின் தீவிர பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் இந்திய மாணவர்களே மிகப்பெரிய எண்ணிக்கையில், அதாவது 3.3 லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர். இந்திய குடும்பங்கள் தங்களது சேமிப்பு மற்றும் வங்கி கடன்களை நம்பியே தங்கள் பிள்ளைகளை அமெரிக்காவுக்கு படிக்க அனுப்புகின்றனர்.

படித்து முடித்தவுடன் கிடைக்கும் வேலையின் வாயிலாக அந்த கடனை அடைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையிலேயே அவர்கள் உள்ளனர். ஆனால், இந்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தால் அமெரிக்க படிப்பு என்பது அதிக செலவுள்ளதாக மாறிவிடுவதுடன், கனவாகவும் மாறிவிடும்.

இதேபோன்று, அரசு அனுமதியின்றி வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் எவ்வளவு காலம் தங்கலாம் என்பதற்கான வரம்பையும் சமீபத்தில் டிரம்ப் அரசு விதித்தது. இத்தகைய நடைமுறைகள் காரணமாக வெளிநாட்டு மாணவர்களின் விசா விதிமுறைகளை கடுமையாக்குகிறது டிரம்ப் நிர்வாகம்.

தற்போது, அமெரிக்காவில் முழு நேரமாக படிக்கும் மாணவர்கள் முன்பு எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தங்கலாம் என்ற முறை இருந்தது. ஆனால், இனிமேல் மாணவர்கள் அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் வரை மட்டுமே தங்க அனுமதி வழங்கப்படும். அதற்கு மேல் படிக்கவோ அல்லது ஆராய்ச்சி செய்யவோ வேண்டுமென்றால் அரசிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டியது கட்டாயம். இந்த புதிய விதி வருகிற செப்., 15 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

இம்மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால், பல ஆண்டுகளில் அமெரிக்க மாணவர் விசா அமைப்பில் செய்யப்படும் மிக முக்கியமான சீர்திருத்தங்களில் ஒன்றாக இது அமையும். இது சர்வதேச மாணவர்கள் நாட்டில் எவ்வளவு காலம் தங்கலாம் மற்றும் பட்டப்படிப்புக்குப் பிறகு தங்கி வேலை செய்வதற்கான செலவு ஆகிய இரண்டையும் பாதிக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us