ADDED : ஜூலை 31, 2026 09:41 PM
புதுச்சேரி: லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டப் படிப்புக்கான நுழைவுத்தேர்வு நேற்று நடந்தது.
இந்த கல்வியாண்டு முதல் காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு நேரடி நுழைவுத் தேர்வினை நடத்தி, ஆய்வு மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கு புதுச்சேரி பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன் அடிப்படையில் நேற்று காலை பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்ட நுழைவு தேர்வு நடந்தது. இத்தேர்வினை எழுதுவதற்கு 96 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 13 மாணவர்கள் தேசியத் தகுதித் தேர்வு (நெட்) வெற்றி பெற்றவர்கள். தேர்வு எழுதுவதிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல், மனையியல், தாவரவியல், வணிகவியல், புள்ளியியல், சுற்றுலாவியல், பொருளாதாரத் துறைகளை சேர்ந்த 75 மாணவர்கள் மட்டும் நுழைவுத் தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய மாணவர்களின் நுழைவுத் தேர்வு மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்கள் முனைவர் பட்ட ஆய்வு செய்வதற்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
தேர்வுக்கான ஏற்பாடுகளை நிறுவன இயக்குநர் சசிகாந்த தாஸ், முனைவர் பட்ட ஆய்வு ஒருங்கிணைப்பாளர் நாயக், தேர்வு நெறியாளர் அலுவலகத்தினர் செய்திருந்தனர்.
