ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் மவுனம் ராகவேந்திரா, ஈஸ்வரப்பா பங்கேற்பு
ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் மவுனம் ராகவேந்திரா, ஈஸ்வரப்பா பங்கேற்பு
ADDED : ஏப் 09, 2024 09:56 PM

ஷிவமொகா: ஆர்.எஸ்.எஸ்., ஏற்பாடு செய்திருந்த யுகாதி நிகழ்ச்சியில் பங்கேற்றும், பா.ஜ., - எம்.பி., ராகவேந்திரா, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா ஆகியோர் பேசிக் கொள்ளவில்லை.
லோக்சபா தேர்தலில் தனது மகனுக்கு சீட் கிடைக்காத கோபத்தில் உள்ள ஈஸ்வரப்பா, ராகவேந்திராவை எதிர்த்து ஷிவமொகாவில் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார்.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்., சார்பில் நேற்று நகரில் யுகாதி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, ஆர்.எஸ்.எஸ்., தொப்பி, வெள்ளை நிற சட்டை, சாதாரண பேன்ட் மட்டும் அணிந்திருந்தாரே தவிர, காக்கி பேன்ட் அணியவில்லை.
அதேவேளையில், எம்.பி., ராகவேந்திரா, ஆர்.எஸ்.எஸ்.,சின் முழு சீருடையுடன் பங்கேற்றார். விழா மேடையில், வலது புறத்தில் ஈஸ்வரப்பாவும், இடது புறத்தில் ராகவேந்திராவும் அமர்ந்திருந்தனர். அப்போதும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை.
பின், ஈஸ்வரப்பா கூறுகையில், ''யுகாதி பண்டிகை ஹிந்துக்களை இணைக்கும் பண்டிகை. ஆர்.எஸ்.எஸ்., நடத்தும் இந்நிகழ்ச்சிக்கு நானாக விரும்பி வந்தேன்,'' என்றார்.
ராகவேந்திரா கூறுகையில், ''எம்.பி.,யாகவோ, கவுன்சிலராகவோ, பா.ஜ., வேட்பாளராகவோ இங்கு வரவில்லை. சாதாரண ஆர்.எஸ்.எஸ்., தொண்டனாக பங்கேற்க வந்தேன். மாநிலத்தில் நடக்கும் முக்கிய பண்டிகைகளில் இதுவும் ஒன்று,'' என்றார்.
யுகாதி பண்டிகையில் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்களுடன் பா.ஜ., - எம்.பி., ராகவேந்திரா பேசிக் கொண்டிருந்தார். இடம்: ஷிவமொகா.

