ஸ் அந்தமான் தீவுகளின் தலைநகர் பெயர்...விஜயபுரம் என மாற்றம்
ஸ் அந்தமான் தீவுகளின் தலைநகர் பெயர்...விஜயபுரம் என மாற்றம்
ADDED : செப் 14, 2024 01:19 AM
புதுடில்லி, காலனித்துவ மரபுக்கு முடிவு கட்டும் நோக்கில், அந்தமான் - நிகோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேர் நகரத்தின் பெயரை, 'ஸ்ரீ விஜயபுரம்' என மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆங்கிலேயர் காலத்து நடைமுறைகளை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு படிப்படியாக ரத்து செய்து வருகிறது. அதன்படி, ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட குற்றவியல் சட்டங்களுக்கு பதில், தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றபடி, கடந்த ஜூலை 1 முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.
ஆய்வு
இந்நிலையில், அந்தமான் - நிகோபார் தீவுகளின் நுழைவாயிலாக விளங்கும் போர்ட் பிளேர் நகரத்தின் பெயரை, ஸ்ரீ விஜயபுரம் என மாற்றி மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது.
கிழக்கிந்திய கம்பெனியின் அப்போதைய கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ் அந்தமானில் காலனி அமைக்க முடிவு செய்தார்.
இதற்காக பிரிட்டீஷ் கடற்படை அதிகாரி கேப்டன் ஆர்க்கிபால்ட் பிளேரை 1788ல் அங்கு அனுப்பினார். அவர் தன் குழுவுடன் அந்தமான் சென்று ஆய்வு செய்து காலனி அமைக்கும் திட்டத்தை வகுத்தார். அவரது நினைவாக, அந்தமான் தலைநகருக்கு போர்ட் பிளேர் என பெயரிடப்பட்டது.
இது குறித்து, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு:
காலனித்துவ முத்திரைகளில் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அந்தமான் - நிகோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேர் பெயரை, ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளோம்.
கடற்படை தளம்
முந்தைய பெயர், காலனித்துவ மரபை கொண்டிருந்தது. ஸ்ரீ விஜயபுரம் என்ற பெயர், நம் சுதந்திரப் போராட்டத்தின் வெற்றியையும், அந்தமான் - நிகோபார் தீவுகளின் தனித்துவத்தையும் பிரதிபலிக்கிறது.
நம் சுதந்திரப் போராட்டம் மற்றும் வரலாற்றில், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு இணையற்ற இடம் உண்டு. சோழ அரசின் கடற்படை தளமாகச் செயல்பட்ட இந்த தீவானது, இன்று நம் பிராந்திய மற்றும் வளர்ச்சி நோக்கங்களுக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது.
இங்கு தான், நேதாஜி முதன்முறையாக நம் தேசியக் கொடியை ஏற்றினார். நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய வீர சாவர்க்கர் மற்றும் பலர், இங்கு தான் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு முன், போர்ட் பிளேரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என்றே அழைக்கப்பட்டு வந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வரவேற்கத்தக்கது!
போர்ட் பிளேர் நகரத்தின் பெயரை, ஸ்ரீ விஜயபுரம் என மாற்ற முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது. பிரதமர் மோடி தலைமையில் நம் கலாசார பாரம்பரியத்துடன் இணைவதற்கு இது ஒரு பெரிய படியாகும்.
ஹிமந்த பிஸ்வ சர்மா
அசாம் முதல்வர், பா.ஜ.,
வளமான வரலாறு
ஸ்ரீ விஜயபுரம் என்ற பெயர் அந்தமானின் வளமான வரலாறு மற்றும் வீரமிக்க மக்களை கவுரவிக்கிறது. காலனித்துவ மனப்பான்மையிலிருந்து விடுபட்டு நம் பாரம்பரியத்தை கொண்டாடுவதற்கான உறுதியை அளித்துள்ளது.
- நரேந்திர மோடி
பிரதமர்