6 எம்.எல்.ஏ.,க்களுடன் பறந்த சம்பாய் சோரன்; பா.ஜ.,வுக்கு தாவ திட்டமா? குழப்பத்தில் கூட்டணி
6 எம்.எல்.ஏ.,க்களுடன் பறந்த சம்பாய் சோரன்; பா.ஜ.,வுக்கு தாவ திட்டமா? குழப்பத்தில் கூட்டணி
ADDED : ஆக 18, 2024 01:24 PM

டில்லி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் திடீரென டில்லிக்கு சென்றிருப்பது இண்டியா கூட்டணியினரிடையே பல்வேறு விவாதங்களை எழச் செய்துள்ளது.
அதிருப்தி
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட போது, முதல்வர் பொறுப்பை சம்பாய் சோரன் ஏற்றார். பின்னர், ஜாமினில் வெளியே வந்த பிறகு ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வர் ஆனார். இதனால், சம்பாய் சோரன் அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால், பா.ஜ.,வில் சேர இருப்பதாகவும் தகவல் வெளியாகியது. ஆனால், இந்த தகவலுக்கு சம்பாய் சோரன் மறுப்பு தெரிவித்து வந்தார்.
டில்லி பயணம்
இந்த நிலையில், ஜார்க்கண்ட்டில் ஆளும் முக்தி மோர்ச்சா கட்சியின் 6 எம்.எல்.ஏ.,க்களுடன் சம்பாய் சோரன் டில்லிக்கு சென்றிருப்பதாகவும், அங்கு பா.ஜ., மூத்த தலைவர்களை சந்தித்து, பா.ஜ.,வில் இணை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சந்திப்பு
இதற்காக, நேற்றிரவு கொல்கத்தாவில் எம்.எல்.ஏ.,க்களுடன் சம்பாய் சோரன் தங்கியதாகவும், அங்கு மேற்கு வங்க பா.ஜ., தலைவர் சுவேந்து அதிகாரியை சந்தித்து பேசியதாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுடன் சம்பாய் சோரன் ஏற்கனவே தொடர்பில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகாத நிலையில், சொந்த காரணங்களுக்காகவே டில்லி செல்வதாக சம்பாய் சோரன் கூறியுள்ளார்.
அதிர்ச்சி
சம்பாய் சோரனின் இந்த விளக்கம் கொடுத்திருந்தாலும், அடுத்து என்ன நடக்குமோ? என்ற சந்தேகமும், அச்சமும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் இண்டியா கூட்டணியினரிடையே எழுந்துள்ளது.