ADDED : ஆக 10, 2024 06:28 AM

தங்கவயல்,: எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் நலனுக்காக கர்நாடக அரசு ஒதுக்கிய நிதியை வேறு திட்டங்களுக்கு செலவிட்டதை கர்நாடக சட்டசபையில் எதிர்க்க வலியுறுத்தி, நேற்று, தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா வீட்டின் முன் தலித் அமைப்பினர் தர்ணா நடத்தினர்.
அப்போது தங்கவயல் தலித் தலைவர் ரங்கநாதன் கூறியதாவது:
கர்நாடக மாநில அரசு எஸ்.சி., - எஸ்.டி., நலன் உட்பட பல்வேறு திட்டங்களுக்காக 34 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. ஆனால், அந்த நிதியை சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, ஐந்து உத்தரவாத திட்டங்களுக்கு மாற்றி செலவிட்டுள்ளது.
எஸ்.சி., - எஸ்.டி., சமுதாயத்தினருக்கு பெரிய துரோகம் செய்துள்ளனர். இதனால் கல்வி உதவித் தொகை உட்பட பல்வேறு நல திட்டங்களை நிறைவேற்ற வழியற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, எஸ்.சி.,க்களுக்கான இட ஒதுக்கீடு மூலம் எம்.எல்.ஏ., ஆகியுள்ள 34 எம்.எல்.ஏ.,க்கள் இதுதொடர்பாக கர்நாடக சட்டசபையில் குரல் எழுப்பி அந்த நிதி தொகையை மீட்க வேண்டும்.
எஸ்.சி., - எஸ்.டி.,க்கள் வாயில்லா பூச்சிகள், கிள்ளுக் கீரைகள் என்று நினைக்கும் கர்நாடக அரசை எதிர்த்து குரல் எழுப்ப வேண்டும் என்பதற்காகவே தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா வீட்டின் முன் தலித் அமைப்பினர் தர்ணா நடத்தினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
காலை 11:00 மணிக்கு துவங்கி பிற்பகல் 3:00 மணி வரை இந்த தர்ணா நடந்தது. இப்போராட்டத்தில் ரங்கநாதன், பிச்சஹள்ளி மஞ்சுநாத், பிரபா, ஸ்டாலின், வசந்த், கிருஷ்ண மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
போராட்டம் நடந்தபோது ரூபகலா, வீட்டில் இல்லை.
மைசூரில் இருந்த அவர், மொபைல் போன் மூலம் போராட்டக்காரர்களை தொடர்பு கொண்டு பேசினார். 'உங்கள் கோரிக்கையை ஏற்கிறேன்' என அவர் உறுதி அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.