ADDED : ஆக 23, 2024 05:57 AM
பெங்களூரு: பன்னரகட்டா பூங்கா அருகில், பெங்களூரு குடிநீர் வாரியம் மேற்கொண்டுள்ள பைப்லைன் பொருத்தும் பணிகள் தாமதமாவதால், பூங்காவுக்கு குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு ரூரல், ஆனேக்கல்லின் பன்னரகட்டா பூங்கா அருகில் ரோட்டில், பைப்லைன் பொருத்தும் பணிகளை பெங்களூரு குடிநீர் வாரியம் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே 80 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. ஆனால் மீதமுள்ள 20 சதவீதம் பணிகளுக்கு, பஞ்சாயத்து உறுப்பினர்கள் இடையூறு செய்கின்றனர். இதனால் பணிகள் தாமதமாகின்றன.
இந்த பிரச்னையை தீர்த்து வைக்கும்படி, பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம், குடிநீர் வாரிய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இவர்களின் பனிப்போரால், பன்னரகட்டா பூங்காவில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
பன்னரகட்டா பூங்கா செயல் நிர்வாக இயக்குனர் சூர்ய சேன் கூறியதாவது:
பன்னரகட்டா பூங்காவுக்கு, காவிரி குடிநீர் வினியோகிக்கும் நோக்கில் பைப்லைன் பொருத்தப்படுகிறது. இத்திட்டத்துக்கு 2.38 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது திருப்திகரமாக இல்லை என, பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் வீடுகளுக்கும் காவிரி நீர் இணைப்பு ஏற்படுத்த வேண்டும் என, பிடிவாதம் பிடிக்கின்றனர். பஞ்சாயத்துக்கு உட்பட்ட சாலையை பயன்படுத்துவது, குப்பையை சுத்தம் செய்வது, பஞ்சாயத்து நிலத்தை பயன்படுத்துவதற்கு, பன்னரகட்டா பூங்காவின் வருவாயில் இருந்து 50 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என, வலியுறுத்துகின்றனர்.
சாலைகள் பொதுப்பணித் துறை அமைத்ததாகும். வனப்பகுதி சாலை மிருகக்காட்சி சாலை சார்பில் அமைத்தது. மிருகக்காட்சி சாலையின் எந்த பணிகளுக்கும், பஞ்சாயத்து நிலத்தை நாங்கள் கையகப்படுத்தவில்லை. ஆனால் பஞ்சாயத்து தலைவர் மஞ்சுநாத், சுற்றுப்புற கிராமங்களுக்கு காவிரி நீர் கொடுக்க வேண்டும் என, வலியுறுத்துகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

