ADDED : செப் 04, 2024 02:07 AM

பீஜிங்: சீனாவில், பள்ளி முன் நின்றிருந்த மாணவர்கள் கூட்டத்தில் பஸ் புகுந்ததில் பெற்றோர் ஆறு பேர், ஐந்து மாணவர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; 13 பேர் காயம் அடைந்தனர்.
நம் அண்டை நாடான சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாங்டான் மாகாணத்தை சேர்ந்த தைவான் நகரில் நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது.
நேற்று காலை மாணவர்களை பள்ளியில் விடுவதற்காக பெற்றோர் சிலர் வந்திருந்தனர்.
அவர்கள் பள்ளியின் நுழை வாயிலில் தங்கள் பிள்ளைகளுடன் காத்திருந்தனர். அப்போது மாணவர்களை ஏற்றி வந்த பள்ளி ஒப்பந்த பஸ் திடீரென மாணவர்கள் கூட்டத்தில் புகுந்தது.
இதில் ஆறு பெற்றோர், ஐந்து மாணவர்கள் என 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் 13 பேர் காயமடைந்தனர். இதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிய பஸ் டிரைவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.