தண்ணீர் தொட்டி இடிந்ததால் பள்ளி மாணவர்கள் பெரும் பீதி
தண்ணீர் தொட்டி இடிந்ததால் பள்ளி மாணவர்கள் பெரும் பீதி
ADDED : பிப் 28, 2025 10:59 PM
பெலகாவி: பள்ளி மாணவர்களின் பயன்பாட்டுக்காக, கட்டப்பட்ட தண்ணீர் தொட்டி திடீரென இடிந்து விழுந்ததால், பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
பெலகாவி, அதானியின் கிளகாவ் கிராமத்தில் அரசு கன்னடம் மற்றும் மராத்தி தொடக்க பள்ளி உள்ளது.
இங்கு படிக்கும் மாணவர்களின் பயன்பாட்டுக்காக, நான்கு ஆண்டுகளுக்கு முன், எல்.ஐ.சி., நிறுவனத்தின் உதவியுடன், தண்ணீர் தொட்டி கட்டப்பட்டது. இதில் நிரப்பப்பட்ட தண்ணீரை, மாணவர்கள் பயன்படுத்தினர்.
நேற்று காலை 11:30 மணியளவில், தண்ணீர் தொட்டி திடீரென இடிந்து விழுந்தது.
சம்பவம் நடந்த போது, மாணவர்கள், ஊழியர்கள் என தொட்டி அருகில் யாரும் இல்லை. வகுப்பில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பொதுவாக மாணவர்கள் தொட்டியின் கீழே நிழலில் அமர்ந்திருப்பர்; விளையாடுவர். யாரும் இல்லாத நேரத்தில் தொட்டி இடிந்து விழுந்ததால், அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை.
தகவலறிந்த கல்வித்துறை அதிகாரிகள், பள்ளிக்கு வந்து பார்வையிட்டனர். தொட்டி இடிந்து விழ, என்ன காரணம் என்பதை கண்டறிய, விசாரணையை துவக்கி உள்ளனர். முதற்கட்ட விசாரணையின்படி, தொட்டி கட்டும் பொறுப்பை ஏற்றிருந்த ஒப்பந்ததாரர், தரமற்ற கட்டுமான பொருட்களை பயன்படுத்தியது, சரியான நிர்வகிப்பு இல்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தண்ணீர் தொட்டி இடிந்த தகவல் கிடைத்தவுடன், மாணவர்களின் பெற்றோர் பீதியடைந்து, பள்ளியில் குவிந்தனர்.
இவர்களை சமாதானம் செய்த அதிகாரிகள், வரும் நாட்களில் இது போன்ற சம்பவம் ஏற்படாமல் பார்த்து கொள்வதாக உறுதி அளித்தனர்.
அதானி போலீசார் விசாரிக்கின்றனர்.