ரகசிய வாக்குமூலம் 'லீக்?' சிக்கண்ணாவுக்கு சிக்கல்!
ரகசிய வாக்குமூலம் 'லீக்?' சிக்கண்ணாவுக்கு சிக்கல்!
ADDED : ஆக 24, 2024 01:44 AM

பெங்களூரு: நீதிபதி முன் ரகசிய வாக்குமூலம் அளித்த பின், சிறையில் தர்ஷனை சந்தித்துப் பேசிய நடிகர் சிக்கண்ணாவுக்கு நோட்டீஸ் அனுப்ப, போலீசார் தயாராகி வருகின்றனர்.
சித்ரதுர்காவை சேர்ந்தவர் ரேணுகாசாமி, 33. இவரை கொலை செய்த வழக்கில் நடிகர் தர்ஷன் சிறையில் உள்ளார். கொலை செய்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு, பெங்களூரு ஆர்.ஆர்., நகரில் உள்ள பப் ஒன்றில், தர்ஷன், நடிகர் சிக்கண்ணா பார்ட்டி நடத்தி உள்ளனர்.
பார்ட்டிக்கு பின், சிக்கண்ணா வீட்டிற்குச் சென்றதால் இந்த வழக்கிலிருந்து தப்பினார். பப்பில் பார்ட்டி நடத்தியபோது, ரேணுகாசாமியை கொலை செய்வது குறித்து தர்ஷன் ஏதாவது பேசினாரா என, சிக்கண்ணாவிடம் போலீசார் விசாரித்தனர்.
நீதிபதி முன், பிரிவு 164 கீழ் ரகசிய வாக்குமூலமும் சிக்கண்ணா கொடுத்துள்ளார். இதன்பின், சிறைக்கு சென்று தர்ஷனை சந்தித்துப் பேசினார்.
ரகசிய வாக்குமூலம் அளித்தது பற்றியும், போலீசார் நடத்தும் விசாரணை பற்றியும் தர்ஷனிடம் அவர் கூறி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் சிக்கண்ணாவிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் தயாராகி வருகின்றனர்.

