டாக்டர்களுக்கான பாதுகாப்பு மாநில அரசுகளுக்கு 'அட்வைஸ்'
டாக்டர்களுக்கான பாதுகாப்பு மாநில அரசுகளுக்கு 'அட்வைஸ்'
ADDED : ஆக 29, 2024 02:24 AM

புதுடில்லி : மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் டாக்டர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின் டாக்டர்கள், நர்ஸ்கள் உட்பட மருத்துவ பணியாளர்களுக்கான பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை, மாநில அரசுகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ், ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு பயிற்சி பெண் டாக்டர், இரவு பணியில் இருந்தபோது மருத்துவமனை வளாகத்திலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
இச்சம்பவம், நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரி நாடு முழுதும் போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆராய, மத்திய சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டது.
இதற்கிடையே, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மாநில தலைமைச் செயலர்கள், டி.ஜி.பி.,க்களுடன் மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன், மத்திய சுகாதாரத்துறை செயலர் அபூர்வ சந்திரா ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அப்போது, விவாதிக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை, அடுத்த இரண்டு வாரத்திற்குள் நடைமுறைப்படுத்த மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு பரிந்துரைத்தது.
இந்த கூட்டத்தில் மத்திய அரசு பரிந்துரைத்த பாதுகாப்பு நடவடிக்கைகள்:
l மாவட்ட மருத்துவமனைகள் / மருத்துவக் கல்லுாரிகளில் ஏற்படும் பாதுகாப்பு குறைபாடு அல்லது உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து எழும் புகார்கள் குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர், டி.எஸ்.பி.,க்களுடன் இணைந்து ஆய்வு நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண்பது.
l மருத்துவமனை / மருத்துவக்கல்லுாரி வளாகங்களில் பணியாற்றும் ஒப்பந்த / தற்காலிக ஊழியர்களை அவ்வப்போது கண்காணிப்பதுடன், போலீசார் கண்காணிப்புக்கு உட்படுத்துவது.
l அனைத்து மருத்துவமனைகள் / மருத்துவக்கல்லுாரி வளாகங்களில் இரவு நேர ரோந்தை போலீசார் அதிகரிப்பது.
l மருத்துவப் பணியாளர்கள் அளிக்கும் பாலியல் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கமிட்டி அமைப்பது.
l மருத்துவப் பணியாளர்களுக்கு என 112 என்ற பிரத்யேக உதவி எண் வசதியை ஏற்படுத்த, அனைத்து மாநில அரசுகளும் நடவடிக்கை எடுப்பது.
l மருத்துவமனை அல்லது மருத்துவக் கல்லுாரிகளில் பயன்படுத்தப்படாத பகுதிகள், சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறாமல் தடுப்பது.
l டாக்டர்களின் பணி நேரத்தை முறைப்படுத்துவது.
l இரவு நேர பணிக்கு வரும் பெண் டாக்டர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாவலர்களை நியமிப்பது.
l பெரிய மருத்துவமனை வளாகங்களில் கட்டுப்பாட்டு அறை அமைத்து, கண்காணிப்பு கேமராக்களை தொடர்ந்து ஆய்வு செய்வது; குறிப்பாக, அதிக நடமாட்டமில்லாத பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது.
l தீ தடுப்பு நடவடிக்கைகளுக்கு மாதிரி சோதனை நடத்துவது போல் மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஒத்திகை நடத்துவது.
l மருத்துவமனைகளில் நன்கு பயிற்சி பெற்ற பாதுகாவலர்களை நியமிப்பது.
l நோயாளிகளுக்கான சக்கர நாற்காலி, ஸ்ட்ரெச்சர்களை தள்ளுவதற்கு உரிய பணியாளர்களை நியமிப்பது.
l நோயாளிகள் இறந்தால், எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை டாக்டர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்குவது.