ADDED : செப் 15, 2024 10:59 PM

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், சி.சி.பி., போலீசார் ரெய்டு நடத்தி, ரவுடி நாகா உட்பட கூட்டாளிகளிடம் இருந்து 18 மொபைல் போன்கள், போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.
கடந்த மாதம், உயர் நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கு விசாரணையின் போது, வழக்கறிஞர் ஒருவர் வாதிடுகையில், 'பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளவருக்கு வீட்டு உணவு வழங்க அனுமதி மறுக்கும் சிறை அதிகாரிகள், புகையிலை, கஞ்சா, துப்பாக்கி வைத்திருக்க அனுமதிக்கின்றனர்' என குறிப்பிட்டிருந்தார்.
அதிர்ச்சியடைந்த நீதிமன்றம், இது தொடர்பாக விசாரிக்க, மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, ஆக., 24ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரெய்டு நடத்தினர். ஆனால், எதுவும் சிக்காமல் வெறுங்கையுடன் திரும்பினர்.
ஆனால், மறுநாளே, சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டிருந்த நடிகர் தர்ஷன், வில்சன் கார்டன் ரவுடி நாகாவுடன் நாற்காலியில் அமர்ந்து கொண்டு, புகை பிடித்தபடியும், டீ குடித்த படியும் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்கள், ஊடகங்களில் வெளியாயின.
இது பல சந்தேகங்களை எழுப்பியது. இது தொடர்பாக விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்குமாறு, சி.சி.பி., கூடுதல் கமிஷனர் சந்திரகுப்தாவுக்கு, நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா உத்தரவிட்டிருந்தார்.
இதற்கிடையில், ரவுடி நாகா, சிறையில் இருந்தபடி வெளியே உள்ளவர்களுக்கு மிரட்டல் விடுத்ததாக சி.சி.பி., போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன் தினம் சிறைக்குள் சி.சி.பி., போலீசார் நடத்திய சோதனையில், ரவுடி நாகா, அவரது கூட்டாளிகளிடம் இருந்து 18 மொபைல் போன்கள், போதைப் பொருட்கள், ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த சோதனை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.