நாங்களே கண்காணிப்போம்; செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி முடிவு!
நாங்களே கண்காணிப்போம்; செந்தில் பாலாஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி முடிவு!
UPDATED : செப் 02, 2024 02:10 PM
ADDED : செப் 02, 2024 02:04 PM

புதுடில்லி: செந்தில் பாலாஜி வழக்கில் கீழமை நீதிமன்ற விசாரணையை சுப்ரீம் கோர்ட்டே நேரடியாக கண்காணிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கைது
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.
மனு
இதனிடையே, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணத்தைப் பெற்று மோசடி செய்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட ஆரணியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், செந்தில் பாலாஜிக்கு எதிரான முறைகேடு வழக்கை ஓராண்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்றும், ஊழல் வழக்குகளை விசாரிப்பதில் அரசு செய்யும் தாமதம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
தாக்கல்
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்ற வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி அனுப்பி வைக்கப்பட்ட கோப்பின் நகல் மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ஆக.,23ம் தேதி இரவு தான் கவர்னர் ஆர்.என்.ரவி, செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அரசு தரப்பு வக்கீலாக, வாஷிங்டன் தனசேகரன் நியமிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கண்காணிப்பு
இந்த நிலையில், மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, 'அரசியல்வாதிகள் தொடர்புடைய அனைத்து வழக்குகளுமே சிக்கல் நிறைந்ததாகத் தான் இருக்கிறது. அனைத்துக்கும் சிறப்பு வக்கீலை நியமித்து விசாரணை நடத்துவது இயலாத காரியம்.
சிறப்பு வழக்கில் தனது பணியை கவனத்தில் வைத்து பொறுப்புடன் செயல்பட வேண்டும். செந்தில் பாலாஜி வழக்கில் கீழமை நீதிமன்ற விசாரணையை சுப்ரீம் கோர்ட்டே நேரடியாக கண்காணிக்கும். விசாரணை எப்படி நடக்கிறது என்பதை அறிய, அடிக்கடி அறிக்கை பெற்று ஆய்வு செய்யப்படும்,' என நீதிபதிகள் கூறினர்.
கேள்வி
மேலும், செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கேட்ட கோப்புகளை 6 மாதங்களை கடந்தும் கவர்னர் நிலுவையில் வைத்தது ஏன்? என்றும் சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.