ரஷ்யாவிடமிருந்து போர் விமானங்கள், எஸ் 500 பாதுகாப்பு கவசம் வாங்குகிறது இந்தியா
ரஷ்யாவிடமிருந்து போர் விமானங்கள், எஸ் 500 பாதுகாப்பு கவசம் வாங்குகிறது இந்தியா
UPDATED : டிச 01, 2025 05:47 PM
ADDED : டிச 01, 2025 05:40 PM

புதுடில்லி: ரஷ்யாவிடமிருந்து போர் விமானங்கள், ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புடின் இந்தியாவிற்கு வருகையின் போது, இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளன.
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, புடின் வரும் டிசம்பர் 4 மற்றும் 5ம் தேதிகளில் நம் நாட்டிற்கு வருகை தருகிறார். அவர் பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சு நடத்த இருக்கிறார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தபின் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் முதல் இந்திய பயணம் இது என்பதால், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்கு முன், 2021 டிசம்பர் மாதம், இந்தியாவிற்கு புடின் வந்தார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப், நம் நாட்டின் மீது கூடுதல் வரிகளை விதித்தார். இதையடுத்து, ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வாங்குவதை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், ரஷ்ய அதிபர் புடினின் இந்திய வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சூழலில், இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வாங்குவது குறித்து இந்தியா விவாதிக்கத் திட்டமிட்டுள்ளது. பிரதமர் மோடி உடன் புடின் சந்திப்பின்போது, ரஷ்யாவின் அதிநவீன எஸ்யூ-57 போர் விமானங்கள் மற்றும் எஸ்-500 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. எஸ் 500 என்பது உலகின் முன்னணி ஏவுகணை பாதுகாப்பு கவச வாகனம் ஆகும். இது, ஆப்பரேஷன் சிந்துாரில் இந்தியா பயன்படுத்திய எஸ் 400 கவச வாகனத்தை காட்டிலும் சக்தி வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இந்தியப் பாதுகாப்புத் துறைச் செயலர் ராஜேஷ் குமார் சிங் கூறியதாவது: இந்தியா- ரஷ்யாவுடனான தனது பாதுகாப்பு ஒத்துழைப்பை இப்போதைக்கு நிறுத்த விரும்பவில்லை. தொடர்ந்து இந்தியா ரஷ்யா மற்றும் அமெரிக்க ஆகிய இரண்டு நாடுகளிடமிருந்தும் ஆயுதங்களை கொள்முதல் செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

