பஸ் கட்டணம் உயர்த்த தனி ஆணையம்; நஷ்டத்தை குறைக்க கர்நாடக அரசு திட்டம்
பஸ் கட்டணம் உயர்த்த தனி ஆணையம்; நஷ்டத்தை குறைக்க கர்நாடக அரசு திட்டம்
ADDED : ஆக 24, 2024 02:05 AM
பெங்களூரு : கர்நாடகாவில் மின் கட்டணத்தை முடிவு செய்ய, கர்நாடக மின் கட்டுப்பாட்டு ஆணையம் இருப்பது போன்று, போக்குவரத்து கழகங்களில் பஸ் கட்டணத்தை உயர்த்த, தனி கட்டுப்பாட்டு ஆணையத்தை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தற்போது போக்குவரத்துக் கழகங்களின் பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பாக, அரசுக்கு கோரிக்கை விடுக்க வேண்டும். அரசு ஒப்புதல் அளித்த பின், கட்டணத்தை உயர்த்த வேண்டும்.
அரசு சம்மதிக்காவிட்டால் போக்குவரத்துக் கழகங்கள், நஷ்டத்தை சமாளிக்க வேண்டும். இதைத் தவிர்க்க, ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவில் பஸ் பயண கட்டணத்தை உயர்த்துவது, அரசின் நோக்கம்.
கட்டண உயர்வு
மின் கட்டணத்தை உயர்த்த, கர்நாடக மின் ஒழுங்குமுறை ஆணையம் இருப்பது போன்று, பஸ் பயண கட்டணத்தை உயர்த்த, கே.டி.ஆர்.சி., எனும் கர்நாடக டிக்கெட் கட்டுப்பாட்டு ஆணையம் அமைக்க, அரசு முடிவு செய்துள்ளது.
இது போன்ற ஆணையம், நாட்டின் எந்த மாநிலத்திலும் இல்லை. கர்நாடகாவில் அமைக்கப்பட்டால், பஸ் கட்டண உயர்வுக்காக ஆணையம் அமைத்த முதல் மாநிலமாக இருக்கும்.
போக்குவரத்துக் கழகங்களை மறு சீரமைப்பதற்காக அமைக்கப்பட்ட சீனிவாச கமிட்டி அறிக்கையின் படி, போக்குவரத்துக் கழகங்கள் 4,540 கோடி ரூபாய் நஷ்டத்தில் உள்ளன. கே.எஸ்.ஆர்.டி.சி., மற்றும் கல்யாண கர்நாடகா போக்குவரத்துக் கழகங்கள் ஓரளவு லாபத்தில் உள்ளன.
வடமேற்கு போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் உள்ளது. பி.எம்.டி.சி., லாபமும் இல்லாமல், நஷ்டமும் இல்லாமல் இயங்குகிறது.
பி.எம்.டி.சி., கட்டணத்தை உயர்த்தி 10 ஆண்டுகளாகின்றன. கே.எஸ்.ஆர்.டி.சி., வடமேற்கு, கல்யாண கர்நாடகா போக்குவரத்துக் கழகங்களில், பயண கட்டணம் அதிகரித்து ஐந்து ஆண்டுகளாகின்றன.
அரசு திட்டம்
மின் கட்டணம், உதிரி பாகங்கள், ஊழியர்களின் ஊதிய உயர்வு, அடிப்படை வசதிகள், பஸ்கள் வாங்குவதற்கான செலவு தொடர்ந்து அதிகரிக்கிறது. எனவே பயண கட்டணத்தை அதிகரிப்பது குறித்து, தனி ஆணையம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
கர்நாடகாவின் நான்கு போக்குவரத்துக் கழகங்கள், கே.டி.ஆர்.சி.,யிடம் ஆண்டுதோறும், தங்களின் லாபம், நஷ்டம், செலவுகள் அடிப்படையில் பயண டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டுகோள் விடுக்க வேண்டும். இந்த ஆணையம், அனைத்தையும் பரிசீலித்த பின், பொதுமக்களின் கருத்தை கேட்டறிந்து, டிக்கெட் கட்டணத்தை அதிகரிப்பதா அல்லது குறைப்பதா என்பதை முடிவு செய்யும்.
ஆணையம் அமைப்பது குறித்தும், ஆணைய தலைவர், உறுப்பினர்கள் எத்தனை பேர் இருக்க வேண்டும் என்பது குறித்து, அமைச்சரவை கூட்டத்தில் முடிவாகும். அதன்பின் சட்டசபையில் தாக்கல் செய்து, ஒப்புதல் பெற்று அமைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

