போக்குவரத்து விதிகள் மீறல் 'சீரியல்' குழுவினருக்கு அபராதம்
போக்குவரத்து விதிகள் மீறல் 'சீரியல்' குழுவினருக்கு அபராதம்
ADDED : மே 13, 2024 06:25 AM
மங்களூரு: கன்னட தொடரில் ஹெல்மெட் அணியாமல் பயணித்த காட்சியை ஒளிபரப்பியதால், தொடரின் இயக்குனருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
கன்னட தொலைக்காட்சி சேனல் ஒன்றில், 'சீதாராமா' என்ற தொடர் ஒளிபரப்பாகிறது. இதன் 14 வது எபிசோடில், இருசக்கர வாகனத்தில், பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் இல்லாமல் பயணித்த காட்சி ஒளிபரப்பானது.
இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து பயணிப்பவரும், ஹெல்மெட் அணிவது கர்நாடகாவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து, போலீஸ் துறை விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. ஆனால் தொடரில் இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண் ஹெல்மெட் அணியாமல் பயணித்துள்ளார். இது விதிமுறை மீறலாகும்.
இதை கவனித்த சமூக ஆர்வலர் ஜெயபிரகாஷ், 2023ன் ஆகஸ்ட் 24ல் மங்களூரு நகர் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.
இது தொடர்பாக, விசாரணை நடத்தும்படி கத்ரி போக்குவரத்து போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். போலீசார் விசாரித்த போது, அந்த காட்சி பெங்களூரின், நந்தினி லே அவுட்டில் படமாக்கப்பட்டது தெரிந்தது. எனவே இந்த வழக்கு நந்தனி லே அவுட் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
ஜெயபிரகாஷும் ராஜாஜிநகர் போக்குவரத்து போலீஸ் நிலையத்துக்கு வந்து, தன் புகார் தொடர்பான விபரங்களை தெரிவித்தார். தொடரின் படக்குழுவினர் விதிகளை மீறியது தெரிந்ததால், தொடர் இயக்குனருக்கு மே 8ல் நோட்டீஸ் அளித்தது.
தவறை ஒப்புக்கொண்ட தொடர் குழுவினர், இனி போக்குவரத்து விதிகளை மீறுவதில்லை என, எழுதி கொடுத்தனர். போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்துக்காக, நேற்று முன்தினம் 500 ரூபாய் அபராதம் செலுத்தினர்.