UPDATED : பிப் 23, 2025 12:22 AM
ADDED : பிப் 22, 2025 11:57 PM

புதுடில்லி: ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சக்திகாந்த தாஸ், 67, பிரதமர் மோடியின் முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் 25வது கவர்னராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் சக்திகாந்த தாஸ். ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், கடந்த 40 ஆண்டுகளில் நிதி, வரிவிதிப்பு, தொழில்கள், உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் மத்திய அரசில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
கொரோனா சமயத்தில் ரிசர்வ் வங்கியின் கவர்னராக நாட்டின் வளர்ச்சிக்கு துணை புரியவும், நிதிநிலைமையை வலுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
இந்நிலையில, பிரதமரின் முதன்மைச் செயலராக நேற்று அவர் நியமிக்கப்பட்டார்.
இதற்கான அறிவிப்பை மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு வெளியிட்டுள்ளது. இதே போல், நிடி ஆயோக்கின் முதன்மை செயல் அதிகாரி சுப்ரமணியத்தின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஆன இவர், 2023ல் இந்த பதவியில் நியமிக்கப்பட்டார். வரும் 25ம் தேதி அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

