மூளை கலங்கிய சிவராஜ் தங்கடகி ஜனார்த்தன ரெட்டி ஆவேசம்
மூளை கலங்கிய சிவராஜ் தங்கடகி ஜனார்த்தன ரெட்டி ஆவேசம்
ADDED : மே 07, 2024 06:25 AM

கொப்பால்: ''முன்னாள் அமைச்சர் ரேவண்ணா, நாட்டை விட்டு ஓடுவாரா. அவரது குடும்பம் நாட்டை விட்டு ஓட கூடியதா,'' என பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கேள்வி எழுப்பினார்.
கொப்பாலில் நேற்று அவர் கூறியதாவது:
ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ குறித்து, நான் பேசுவது சரியாக இருக்காது. சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதன்படி எடுப்பர். அனைவரின் கதைகளும், லோக்சபா தேர்தலுக்கு பின் தெரியும்.
ரேவண்ணா இந்த நாட்டை விட்டு, எங்காவது ஓடி போவாரா. இவரது குடும்பம் நாட்டை விட்டு ஓடும் குடும்பமா. இது அரசியல் சதி இல்லாமல் வேறு என்ன. பிரஜ்வல் ரேவண்ணா 'சிடி' மற்றும் பென் டிரைவ் விஷயத்தில், யாரும் விசாரணையில் இருந்து தப்பிக்க முடியாது.
ரேவண்ணாவுக்கு என தனிப்பட்ட கவுரவம் உள்ளது. ஓட்டுப்பதிவு நடக்கும் நிலையில், இத்தகைய நாடகம் சரியல்ல. கர்நாடக மக்கள் முட்டாள்கள் அல்ல. நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக பிரதமராவது உறுதி; காங்கிரசின் நாடகம் நிற்பதும் உறுதி.
சிவராஜ் தங்கடகி, என் வீட்டுக்கு வந்து பணம் வாங்கி, எம்.எல்.ஏ.,வானவர். அதன் பின், பா.ஜ.,வுக்கு ஆதரவு தெரிவித்ததும் இவரே. இவர் யார், யார் வீட்டுக்கு சென்றார் என்பதை நீங்களே பார்த்துள்ளீர்கள். சிவராஜ் தங்கடகியின் தகுதி, யோக்கியதை என்ன; என் தகுதி என்ன; அவர் அகங்காரத்துடன் பேசினால், அவரை எங்கு நிறுத்த வேண்டுமோ, அங்கு நிறுத்துவேன்.
மோடி என கோஷமிடுவோரை கன்னத்தில் அறையும்படி, இவர் கூறினார். எங்கள் கட்சி இளைஞர்கள், 'நாங்கள் மோடி, மோடி என்போம். கன்னத்தில் அறையுங்கள் பார்க்கலாம்' என அவருக்கு சவால் விடுத்தனர். இவர் அதிர்ஷ்டத்தில் அமைச்சரானவர். ஆணவ பேச்சை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அவருக்கு மக்கள் பாடம் கற்பிப்பர்.
வெடிகுண்டுகள் எங்கே இருந்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது அந்த நாட்டுக்கு பாடம் கற்பிக்கும் பணியை, நம் பிரதமர் மோடி செய்துள்ளார். இது அமைச்சரான சிவராஜ் தங்கடகிக்கு தெரியவில்லை. தன் தகுதியை மீறி பேசியுள்ளார். மூளை கலங்கியது போன்று நடந்து கொள்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.