ஈரான் ஒப்பந்தத்தில் குறுகிய பார்வை: ஜெய்சங்கர் பதிலடி
ஈரான் ஒப்பந்தத்தில் குறுகிய பார்வை: ஜெய்சங்கர் பதிலடி
ADDED : மே 16, 2024 12:20 AM
கோல்கட்டா: ஈரானின், சாபஹர் துறைமுகத்தை 10 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திட்டுள்ள நிலையில், 'ஈரானில் முதலீடு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும்' என, அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதற்கு பதிலளித்த, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்த விஷயத்தில் குறுகிய பார்வை கூடாது என, கூறியுள்ளார்.
மேற்காசிய நாடான ஈரானில் உள்ள சாபஹர் துறைமுகத்தை, 2018 முதல் குத்தகை அடிப்படையில் இந்திய அரசு நிர்வகித்து வருகிறது. இந்த குத்தகை ஆண்டுக்கொரு முறை புதுப்பிக்கப்பட்டு வந்தது.
தற்போது, நீண்ட கால குத்தகைக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்படி சாபஹர் துறைமுகத்தை, அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்திய அரசு நிர்வகிப்பதுடன் விரிவுபடுத்த உள்ளது. இந்த குத்தகை, தொடர்ந்து புதுப்பிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அணு ஆயுதம் தயாரிப்பு தொடர்பாக ஈரான் மீது, அமெரிக்கா ஏற்கனவே பொருளாதார ரீதியாக பல தடைகளை விதித்துள்ளது.
தற்போது சாபஹர் துறைமுகம் தொடர்பாக ஈரானுடன், இந்தியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தை அடுத்து, இந்தியா மீதும் பொருளாதார தடை விதிக்க நேரிடும் என, அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில், நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று கூறியதாவது:
சாபஹர் துறைமுகம், அந்த பிராந்தியத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அமெரிக்கா முன்பு கூறியுள்ளது. தற்போது ஈரானுடனான இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, அந்த பிராந்தியம் மற்றும் உலக நாடுகள் பெரும் பலனை பெறும். அது தெரிந்திருந்தும், இந்த விஷயத்தை மிகவும் குறுகிய நோக்கத்துடன் பார்ப்பது முறையல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.