ஓட்டுப்பதிவு நடைபெறும் பகுதிகளில் இணையதள சேவை முடக்கமா?: தேர்தல் கமிஷன் மறுப்பு
ஓட்டுப்பதிவு நடைபெறும் பகுதிகளில் இணையதள சேவை முடக்கமா?: தேர்தல் கமிஷன் மறுப்பு
UPDATED : ஏப் 03, 2024 03:20 PM
ADDED : ஏப் 03, 2024 03:01 PM

புதுடில்லி: லோக்சபா தேர்தல் நடைபெறும் ஓட்டுச்சாவடிகளை சுற்றி 200 மீட்டருக்கு இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறி பரவும் தகவல்கள் உண்மையல்ல என இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
கடந்த மார்ச் 16ம் தேதி இந்தியாவில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் அறிவித்தார். முதற்கட்டம் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி துவங்குகிறது. 7வது கட்டம் ஜூன் 1ம் தேதி முடிவடைகிறது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாகுகிறது.
லோக்சபா தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில், அதற்காக பல்வேறு அறிவிப்புகளை சமூகவலைதளத்தில் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டதாக ஒரு நோட்டீஸ் ஒன்று வேகமாக சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.
அதில், ‛‛ தேர்தல் நடைபெறும் ஓட்டுச்சாவடியை சுற்றி 200 மீட்டருக்கு இணையதள சேவைகள் முடக்கப்பட வேண்டும். ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் இடத்தை சுற்றி 250 மீட்டருக்கு இணையதள சேவைகள் ரத்து செய்யப்பட வேண்டும்'' எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், லோக்சபா தேர்தல் நடைபெறும் ஓட்டுச்சாவடிகளை சுற்றி 200 மீட்டருக்கு இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறி பரவும் தகவல்கள் உண்மையல்ல என இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்திய தேர்தல் கமிஷன் எக்ஸ் சமூகவலைதளத்தில் அந்த நோட்டீஸ் போலியானது என பதிவிட்டுள்ளது.

