கடவுளே ஓய்வெடுக்கும் போது முதல்வர் ஓய்வெடுக்க கூடாதா?
கடவுளே ஓய்வெடுக்கும் போது முதல்வர் ஓய்வெடுக்க கூடாதா?
ADDED : மே 11, 2024 02:43 AM

திருவனந்தபுரம்,'உலகத்தை ஆறு நாளில் படைத்த கடவுளே ஏழாவது நாள் ஓய்வெடுத்துள்ளார். அப்படி இருக்கையில், தேர்தலுக்காக கடுமையாக உழைத்த முதல்வர் பினராயி விஜயன் ஓய்வெடுக்கக் கூடாதா?' என, அவரது வெளிநாட்டு பயணத்தை மார்க்சிஸ்ட் கட்சியினர் நியாயப்படுத்தி உள்ளனர்.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு லோக்சபா தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், முதல்வர் பினராயி விஜயன் ஓய்வெடுப்பதற்காக தன் குடும்பத்தினருடன் கடந்த 6ம் தேதி இந்தோனேஷியாவுக்கு சென்றார்.
இதைத் தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு அவர்கள் பல்வேறு நாடுகளுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வரின் இந்த பயணத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. முதல்வருக்காக வேறு யாரோ செலவு செய்து அழைத்து செல்வதாக அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதற்கு விளக்கம் அளித்த மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர் ஏ.கே.பாலன் நேற்று கூறியதாவது:
முதல்வர் விண்வெளிக்கு சென்றுவிடவில்லை. அவர் இந்தோனேஷியாவுக்கு தான் சென்றுள்ளார். அந்தமான் தீவில், 'இந்திரா பாயின்ட்' பகுதியில் இருந்து அந்த நாடு 60 கி.மீ., துாரத்தில் தான் உள்ளது.
நவ கேரள சதஸ் திட்டத்துக்காக மாநிலம் முழுதும் 30 நாட்கள் அவர் பயணம் மேற்கொண்டார். ஒரு நாளில் நான்கு மணி நேரம் பொதுக்கூட்டங்களில் பேசினார்.
தேர்தலுக்காக கடுமையாக உழைத்த முதல்வர் ஓய்வெடுப்பதில் என்ன பிரச்னை? உலகத்தை ஆறு நாட்களில் படைத்த கடவுள் கூட, ஏழாவது நாளான ஞாயிற்றுக் கிழமை ஓய்வெடுத்ததாக பைபிளில் கூறப்பட்டுள்ளது. அதுபோல, கேரள மக்களின் நலனுக்காக ஓய்வின்றி உழைத்த முதல்வர் தற்போது ஓய்வெடுக்கச் சென்றுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.