ADDED : மே 29, 2024 09:18 PM

மாண்டியா: வாலிபர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக புகாரை வாங்காமல் பணியில் அலட்சியமாக செயல்பட்ட எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
மாண்டியாவின் நாகமங்களா பெல்லுார் கிராமத்தில் வசிப்பவர் அபிலாஷ். கடந்த 25ம் தேதி இவரது பைக் மீது, வேகமாக சென்ற கார் உரசியது.
இதனால் அபிலாஷுக்கும், காரில் இருந்த வேறு மத வாலிபர்களுக்கும் இடையே, தகராறு ஏற்பட்டது. அபிலாஷ் தாக்கப்பட்டார். பெல்லுார் போலீசில் புகார் செய்தார். ஆனால் அங்கு புகாரை வாங்கவில்லை.
கடந்த 27ம் தேதி அபிலாஷ் வீட்டிற்குச் சென்ற, வேறு மத கும்பல் அபிலாஷையும், அவரது குடும்பத்தினரையும் மிரட்டியது. இதுபற்றி அறிந்த ஹிந்து அமைப்பினர் நேற்று முன்தினம் காலை, பெல்லுார் போலீஸ் நிலையம் முன் போராட்டம் நடத்தினர்.
பின்னர் மாண்டியா சென்று, எஸ்.பி., யத்தீஷிடம் புகார் அளித்தனர். புகாரின்படி 11 பேர் மீது வழக்கு பதிவானது.
இந்நிலையில், அபிலாஷ் புகார் அளித்தபோது, அதை வாங்காமல், பெல்லுார் போலீஸ் நிலைய எஸ்.ஐ., பசவராஜ் சிஞ்சோலி பணியில் அலட்சியம் காட்டியது தெரிந்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து, எஸ்.பி., யத்தீஷ் நேற்று உத்தரவிட்டார்.