ADDED : ஏப் 17, 2024 06:23 AM

துமகூரு : ''சித்தராமையாவை முதல்வராக்க, 86 எம்.எல்.ஏ.,க்களிடம் கையெழுத்து பெற்று தந்தது நான் தான்,'' என துமகூரு பா.ஜ., வேட்பாளர் சோமண்ணா தெரிவித்தார்.
துமகூரில் நேற்று அவர் கூறியதாவது:
சித்தராமையாவுக்கு ஒரே பூத்தில், 2,000 ஓட்டுகள் முன்னிலை கிடைக்க செய்தது நான்தான். சித்தராமையாவை முதல்வராக்க 86 எம்.எல்.ஏ.,க்களிடம் கையெழுத்து பெற்று, தேவகவுடாவிடம் கொடுத்ததும், நானே தான்.
சித்தராமையா பேசும் போது, தகுதியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். வாய்ப்பு கிடைத்ததால், சித்தராமையா முதல்வரானார். தகுதி உள்ளவர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைப்பது இல்லை. மேலே அமர்ந்துள்ளோம் என்பதால், மற்றவரை விமர்சிப்பதை சித்தராமையா நிறுத்த வேண்டும்.
நாங்கள் ஏழைகளின் பிள்ளைகள். மற்றவரின் அரசியல் குறித்து, விமர்சிக்க கூடாது. என் பின்னால், பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா போன்ற தலைவர்கள் உள்ளனர். எனக்கு அரசியல் கலாசாரம் கற்றுக்கொடுத்த தேவகவுடாவும் உடன் இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.

