ஒரே நேரத்தில் வெடித்த 'பேஜர்' லெபனானில் எட்டு பேர் பலி 2,500 பேர் காயம்
ஒரே நேரத்தில் வெடித்த 'பேஜர்' லெபனானில் எட்டு பேர் பலி 2,500 பேர் காயம்
ADDED : செப் 18, 2024 01:08 AM

பெய்ரூட், லெபனானில், ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறி வைத்து நடத்தப்பட்ட மின்னணு தாக்குதல்களில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளின், 'பேஜர்' சாதனம் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. இதில், எட்டு பேர் பலியாகினர். 2,500க்கும் மேற்பட்டோர் காயம்அடைந்தனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையேயான போர் கடந்தாண்டு அக்., 7ல் துவங்கியது.
தாக்குதல்
ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, அண்டை நாடான லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.
ஈரானின் ஆதரவைப் பெற்ற ஹிஸ்புல்லா, இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.
இந்நிலையில், லெபனானில் நேற்று ஒரே நேரத்தில், 100க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின், பேஜர் எனப்படும் தகவல்களை அனுப்புவதற்கு பயன்படுத்தப்படும் மின்னணு சாதனம் வெடித்துச் சிதறியது.
லெபனானின் பல பகுதிகளில் நடந்த இந்த தாக்குதலின்போது, பயங்கரவாதிகளும், அவர்களுக்கு அருகில் இருந்தவர்களும் காயமடைந்தனர். சிரியாவின் சில பகுதிகளிலும் இதுபோன்ற தாக்குதல்கள் நடந்தன.
மிகப் பெரிய மின்னணு தாக்குதலாகக் கருதப்படும் இந்த சம்பவத்தில் ஹிஸ்புல்லா அமைப்பினர் சிலர் உட்பட, எட்டு பேர் பலியாகினர். 2,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில், 200 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் துவங்கியதில் இருந்து, மொபைல் போன்களை பயன்படுத்துவதை தவிர்கும்படி, தங்கள் அமைப்பில் உள்ளவர்களுக்கு ஹிஸ்புல்லா உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, தங்களுடைய சொந்த தகவல் தொழில்நுட்ப வசதியை உருவாக்கினர். அதன்படியே, பயங்கரவாதிகளுக்கு, பேஜர் வழங்கப்பட்டது.
ஒரே நேரத்தில், 100க்கும் மேற்பட்ட பேஜர்கள் வெடித்து சிதறிய சம்பவத்துக்கு இஸ்ரேலே காரணம் என, ஹிஸ்புல்லா கூறியுள்ளது. ஆனால், இது குறித்து இஸ்ரேல் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
லித்தியம் பேட்டரி
லெபனானுக்கான தங்களுடைய துாதர் மொஜாதா அபானி, இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளதாக ஈரான் கூறியுள்ளது.
லித்தியம் பேட்டரிகள் அதிக வெப்பமடையும்போது, அவற்றில் புகை வரவும், உருகவும், தீப்பிடிக்கவும் வாய்ப்புள்ளது.
இந்த வகை பேட்டரிகள், மொபைல் போன், லேப்டாப், பேஜர் போன்றவற்றில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
லித்தியம் பேட்டரிகள், வெடிக்கும் போது 500 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு வெப்பத்தை கொடுக்கக் கூடியது என்றும் கூறப்படுகிறது.