உட்கட்சி பூசலை மறைக்க போராட்டம் பா.ஜ.,வினர் குறித்து சிவகுமார் கிண்டல்
உட்கட்சி பூசலை மறைக்க போராட்டம் பா.ஜ.,வினர் குறித்து சிவகுமார் கிண்டல்
ADDED : ஆக 22, 2024 04:13 AM

பெங்களூரு: ''பா.ஜ.,வில் உட்கட்சி பூசல் தலைவிரித்து ஆடுகிறது. அதை மறைக்கத் தான் போராட்டம் நடத்துகின்றனர்,'' என, துணை முதல்வர் சிவகுமார் கிண்டல் அடித்துள்ளார்.
மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து, சில வாரங்களாக பா.ஜ., அடிக்கடி போராட்டம் நடத்தி வருகிறது.
'மூடா' முறைகேடு மற்றும் வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேட்டை கண்டித்து மைசூரு பாதயாத்திரையும் மேற்கொண்டனர்.
இதற்கிடையில், பல்லாரியில் பாதயாத்திரை நடத்துவது குறித்து, அக்கட்சியின் அதிருப்தி தலைவர்கள் யோசித்து வருகின்றனர்.
இதுகுறித்து, துணை முதல்வர் சிவகுமார், பெங்களூரில் நேற்று கூறியதாவது:
மைசூரு மேம்பாட்டு ஆணையத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி மைசூரு பாதயாத்திரை மேற்கொண்டனர். இதற்கு, காங்கிரஸ் தக்க பதிலடி கொடுத்துள்ளோம்.
இப்போது மீண்டும் போராட்டம் நடத்துவதாக கூறுகின்றனர். போராட்டம் நடத்த வேண்டாம் என்று கூற முடியுமா? வேண்டாம் என்று நாங்கள் கூற மாட்டோம்.
பா.ஜ.,வில் உட்கட்சி பூசல் தலைவிரித்து ஆடுகிறது. இந்த பிரச்னையை சரி செய்து கொள்வதற்காக தான் போராட்டம் நடத்துகின்றனர். மற்றபடி எந்த விஷயமும் இல்லை.
புதிய மதகு ஷட்டர்
துங்கபத்ரா அணை மதகு ஷட்டரை சீரமைக்க உதவிய தொழிலாளர்கள் முதல் பொறியாளர்கள் வரை அனைவருக்கும் நன்றி. துங்கபத்ரா அணை மதகின் ஷட்டர் உடைந்ததற்கு, பா.ஜ., - ம.ஜ.த.,வினர் எங்களை குறை கூறுகின்றனர். இரவு பகலாக துாங்காமல், புதிய மதகு ஷட்டர் பொருத்தி உள்ளோம்.
அணை நிரம்பியதும், நானும், முதல்வரும் நேரில் சென்று, சீர்வரிசை சமர்ப்பணம் செய்வோம். துரிதமாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட ஒவ்வொரு தொழிலாளரும் கவுரவிக்கப்படுவர். குற்றச்சாட்டுகள் வருவது சாதாரணம்.
அவற்றை பொருட்படுத்தாமல், பணி செய்து நிரூபித்துள்ளோம். இதை தான் 'விமர்சனங்கள் அழியும்; படைப்புகள் நிலைத்து நிற்கும்' என்பர்.
மாநிலத்தின் அணைகளும் பாதுகாப்பாக உள்ளதா என்று ஆய்வு செய்வதற்காக, கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அலமாட்டி அணை நிரம்பி வழிகிறது. மாண்டியா உட்பட சில பகுதிகளில் இன்னும் பல ஏரிகள் நிரம்பாமல் உள்ளன. எனவே இன்னும் நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கிறோம்.
கலபுரகியை சுகாதார மையமாக மாற்ற முடிவு செய்துள்ளோம். 371 படுக்கைகள் கொண்ட ஜெயதேவா மருத்துவமனை, செப்., 17ம் தேதி திறக்கப்படும். 'மூடா' வழக்கில் உண்மை வெல்லும். எங்கள் முதல்வர் சித்தராமையா, எந்த தவறும் செய்யவில்லை.
ஆதரவு
தாவர்சந்த் கெலாட், தலித் என்பதால் அவருக்கு கவர்னர் பதவி வழங்கப்படவில்லை. அரசியல் சாசனத்தால் நியமிக்கப்பட்டு உள்ளார். முதல்வருக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முதல் அனைவரின் ஆதரவும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.