கிரிமினல் வழக்கு ரத்து கோரி ஐகோர்ட்டில் சிவகுமார் மனு
கிரிமினல் வழக்கு ரத்து கோரி ஐகோர்ட்டில் சிவகுமார் மனு
ADDED : ஏப் 23, 2024 11:33 PM
பெங்களூரு, : வாக்காளர்களை மிரட்டியதற்காக, தன் பதிவான கிரிமினல் வழக்கை ரத்து செய்யும்படி, துணை முதல்வர் சிவகுமார், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
பெங்களூரு ரூரல் காங்கிரஸ் வேட்பாளராக, துணை முதல்வர் சிவகுமாரின் தம்பி சுரேஷ் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக, ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், சமீபத்தில் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.
அப்போது, 'என் தம்பிக்கு ஓட்டு போடவில்லை என்றால், காவிரி தண்ணீர் வினியோகிக்கப்படாது. இருப்பிட சான்றிதழ் வழங்கப்படாது' என, வாக்காளர்களை மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இது தொடர்பாக, பா.ஜ., தரப்பில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், பறக்கும் படையினர், சிவகுமார் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பெங்களூரு ஆர்.எம்.சி., யார்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர் மீது கடந்த 20ம் தேதி கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கை ரத்து செய்யும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சிவகுமார், நேற்று மனு தாக்கல் செய்தார். விரைவில் இம்மனு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

