போலீஸ் ஏட்டு கையை கடித்த தவெக தொண்டர்: வீடியோ வைரல்
போலீஸ் ஏட்டு கையை கடித்த தவெக தொண்டர்: வீடியோ வைரல்
ADDED : டிச 07, 2025 09:22 PM

தர்மபுரி: ஆர்ப்பாட்டத்தின் போது பாதுகாப்புப் பணியில் போலீஸ் ஏட்டு கையை தவெக தொண்டர் ஒருவர் கடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தும்போது தொண்டர்கள் தடையை மீறும்போது போலீசார் அதனை தடுப்பார்கள். அப்போது இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்படுவது வழக்கம். போலீசார் தள்ளிவிட்டால், தொண்டர்களும் அவர்களை தள்ளிவிடும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடப்பது வழக்கம். கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் தடியடி நடத்துவர். இதனை நாம் பார்த்துள்ளோம். ஆனால், முதல்முறையாக போலீஸ்காரரை தவெக தொண்டர் ஒருவர் கடித்த சம்பவம் நடந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில், தக்காளி மார்க்கெட் அருகே, நவ., 22ம் தேதி, டாஸ்மாக் கடை அருகே, 'பார்' வசதியுடன் 'மனமகிழ் மன்றம்' திறக்கப்பட்டது. ஒரு வாரமாக செயல்பாட்டில் இருந்து வருகிறது. இதற்கு மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், த.வெ.க.,வினர் இதை கண்டித்து தர்மபுரி மாவட்ட செயலாளர் சிவா தலைமையில், 'மனமகிழ் மன்றம்' முன் இன்று(டிச.,07) மதியம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு முற்றுகையிட முயன்றனர். இதனால் கட்சினருக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது, ஜெமினி, 23, என்ற தொண்டர், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அருண் என்ற போலீஸ் ஏட்டுவின் கையை கடித்தார். இது போலீசார் உட்பட அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து த.வெ.க.,வினர் டாஸ்மாக் கடை முன் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், 16 பெண்கள் உட்பட, 103 பேரை, பாலக்கோடு டி.எஸ்.பி., ராஜசுந்தர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். தவெக தொண்டர் கையை கடித்த சம்பவம் தொடர்பாக இதுவரை போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு தவெகவினர் விமர்சிக்கப்பட்டு வந்தனர். தற்போது அக்கட்சி தொண்டர் ஒருவர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் கையை கடித்த நிகழ்வு கடுமையான, கேலி, விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இது குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

