ADDED : ஜூன் 14, 2024 12:26 AM
நாக்பூர், மஹாராஷ்டிராவின் நாக்பூரில், வெடிமருந்து ஆலையில் நேற்று நடந்த பயங்கர வெடிவிபத்தில் ஆறு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மஹாராஷ்டிராவின் நாக்பூர் பகுதியில் ஹிங்கனா அருகே உள்ளது தம்மா கிராமம். இங்கு தனியார் வெடிமருந்து உற்பத்தி ஆலை உள்ளது. இங்குள்ள பேக்கேஜ்சிங் பிரிவில் நேற்று பிற்பகல் 1:00 மணியளவில், தொழிலாளர்கள் சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அங்கு வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், ஒன்பது தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த நாக்பூர் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு இரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ஒரு ஆண் மற்றும் ஐந்து பெண்கள் என, மொத்தம் ஆறு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்த மேலும் மூவர் தொடர்ந்து சிகிச்சை பெறுகின்றனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.