சாமுண்டி மலையை மேம்படுத்த 'ஸ்மார்ட் கார்டு' திட்டம்
சாமுண்டி மலையை மேம்படுத்த 'ஸ்மார்ட் கார்டு' திட்டம்
ADDED : செப் 08, 2024 06:57 AM

மைசூரு: மைசூரு சாமுண்டி மலை மேம்பாட்டுக்காக புதிய திட்டத்தை, ஸ்ரீ சாமுண்டீஸ்வரி ஷேத்திர மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டுள்ளது. அம்மனை தரிசிக்க, 12,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான நான்கு வகையான ஸ்மார்ட் கார்டுகளை அறிமுகம் செய்ய அது திட்டமிட்டுள்ளது.
மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரியை தரிசிக்க வரும் சுற்றுலா பயணியர், பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவதால், நீண்ட நேரம் வரிசையில் நின்று, அம்மனை தரிசிக்க முடியாமல் திரும்பிச் செல்கின்றனர்.
இந்நிலையில், கோவிலை மேம்படுத்த, ஸ்ரீ சாமுண்டீஸ்வரி ஷேத்திர மேம்பாட்டு ஆணையத்தை கர்நாடக அரசு அமைத்தது. சில நாட்களுக்கு முன்பு, முதல்வர் சித்தராமையா தலைமையில் இந்த ஆணையத்தில் முதல் கூட்டம் நடந்தது.
ஸ்மார்ட் கார்டு
தற்போது, பக்தர்கள் சாமுண்டீஸ்வரியை விரைந்து தரிசிக்க, ஆணையம் திட்டமிட்டு உள்ளது. அதற்காக நான்கு வகையான 'ஸ்மார்ட் கார்டு' திட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ளனர். இந்த கார்டு வைத்துள்ளோர், மாதத்தில் ஒரு நாள், நேரடியாக கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசிக்கலாம்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் இந்த கார்டுகளை ஸ்கேன் செய்ய, கோவில் நுழைவு வாயிலில் ஸ்கேனர் கருவி அமைக்கப்படும். அங்கிருக்கும் கோவில் நிர்வாகிகள், கார்டுகளை ஸ்கேன் செய்து பக்தர்களை உள்ளே அனுப்புவர்.
இந்த கார்டுகளை வாங்க பொருளாதார வசதி உள்ளவர்களை மனதில் வைத்துக் கொண்டு வரப்பட உள்ளது. இதன் மூலம், கோவிலுக்கு வரும் வருமானம் அதிகரிக்கும். இந்த தொகையை, சாமுண்டி மலையில் அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படும்.
அடுத்த நடக்கும் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி ஷேத்திர மேம்பாட்டு ஆணையத்தின் கூட்டத்தில் இறுதி செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.