ADDED : ஜூலை 08, 2024 12:43 AM
ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் நோக்கி வந்த பஸ்சில் 2.9 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகளை, வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோல்கட்டாவில் இருந்து அவற்றை கடத்தி வந்த இரு பயணியரை கைது செய்தனர்.
மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் இருந்து, ஹைதராபாதிற்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு தங்கத்தை பஸ்சில் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரகத்திற்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கோல்கட்டாவில் இருந்து ஹைதராபாத் நோக்கி வந்த பஸ்சை தடுத்து நிறுத்தி, அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பஸ்சில் அமர்ந்திருந்த இரு பயணியரின் உடைமைகளை அதிகாரிகள் பரிசோதித்தனர்.
அப்போது, அவர்களின் இடுப்பில் அணிந்திருந்த பெல்டில், தங்கக்கட்டிகளை பதுக்கி வைத்திருந்ததை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
கைப்பற்றப்பட்ட 4 கிலோ எடையிலான தங்கக்கட்டிகளின் மதிப்பு 2.9 கோடி ரூபாய் என்பது தெரியவந்துள்ளது.
அவற்றை கடத்தி வந்த இரு பயணியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.