தன் மீதான விமர்சனத்தை திரும்ப பெற முதல்வருக்கு சமூக ஆர்வலர் எச்சரிக்கை
தன் மீதான விமர்சனத்தை திரும்ப பெற முதல்வருக்கு சமூக ஆர்வலர் எச்சரிக்கை
ADDED : ஆக 03, 2024 11:27 PM

பெங்களூரு: 'என் மீதான விமர்சனத்தை முதல்வர் திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் வழக்கு தொடருவேன்' என, சமூக ஆர்வலர் ஆப்ரஹாம் எச்சரித்துள்ளார்.
'மூடா'வில் நடந்த முறைகேடு குறித்து, முதல்வர் சித்தராமையா மீது, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம், சமூக ஆர்வலர் ஆப்ரஹாம் புகார் அளித்தார். வழக்கு தொடர அனுமதியும் கேட்டிருந்தார். இதையடுத்து கவர்னரும், முதல்வருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இதனால் எரிச்சல் அடைந்த முதல்வர் சித்தராமையா, நேற்று முன் தினம் ஊடகத்தினர் சந்திப்பில், சமூக ஆர்வலர் ஆப்ரஹாம் ஒரு 'பிளாக்மெயிலர்' என, விமர்சித்தார்.
முதல்வருக்கு பதிலடி கொடுத்து, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் நேற்று, ஆப்ரஹாம் வெளியிட்ட பதிவு:
முதல்வர் சித்தராமையா, என்னை 'பிளாக்மெயிலர்' என, விமர்சித்துள்ளார். அவரது பேச்சு எனக்கு வருத்தமளிக்கிறது. என் கவுரவத்துக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.
என்னை பற்றி கூறிய வார்த்தையை, முதல்வர் திரும்பப் பெற வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது கிரிமினல் மற்றும் மானநஷ்ட வழக்கு தொடர்வேன்.
பிரதமர் நரேந்திர மோடியை, காங்கிரஸ் தலைவர் ராகுல் அவமதிப்பாக விமர்சித்ததால், இவர் மீது மானநஷ்ட வழக்குப் பதிவானது. அதேபோன்று, சித்தராமையா மீதும் மானநஷ்ட வழக்கு தொடுப்பேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.